பாம்புகள் நுழைந்த
கண்ணாடி அறையுள்ளிருந்து
அவசரமாக
Politics man
என் பிம்பங்களைப் பிடுங்கி எடுத்தேன்

காற்றின் விஸ்தீரணம் மீது கவியும்
துர்மணத்துடன்தான்
பாம்புகள் நுழையத்தொடங்குகின்றன

என் குரல் வழியே ஆரவாரப்பட
எதுவுமே இல்லை
இரட்டை நாக்குடன்
மேனியிலூறிய பாம்பை
கனவுகளின் இடுக்குகளினூடாக
உதறிவிட்டு திரும்பி நடக்க முடிகிறது
கனவினது ஆழ் உறக்கத்திற்குள்

பறக்கும் பாம்பு
கண்ணாடி அறையினுள்
தனது இறக்கைகளை உதிர்க்கிறது
நான்
கனவுக்கு வெளியே
அல்லது
கண்ணாடி அறைக்குப் பின்னால்
இருந்து அவதானிக்கின்றேன்
பாம்புகளுக்குப் பற்களிலிலை
உதிர்ந்த இறக்கைகளில்
பற்கள் முளைத்திருக்கின்றன

நெடு நாட்களாய்
எனது உறக்கத்தைக் கலைத்து
இருளில் மூழ்கடித்துப் பயமூட்டும்
ஒவ்வொரு பாம்புக்கும்
எனது முகம் மட்டும்
எப்படி வாய்த்திருக்கிறது

எனது குரலும்
கண்களினது ஒளியும்
வற்றிக் காயத்தொடங்குகையில்
இரவுகளின் கரிய தடங்களினூடு
உட்புகுகிறேன் கண்ணாடி அறையுள்
எனது பிம்பங்களுக்கு
பாம்புகள் படம் வரித்துக் குடைபிடிக்கின்றன
இப்போது பாம்புகளின் குடையின் கீழ் ஒரு பாம்பாய் வாழ நேர்கிறது

- சித்தாந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It