புண்படுத்துமென்று

தெரிந்தே

நீ வீசும்

ivalbharathi_girlநெருப்பு வார்த்தைகளை

எந்தவித கவசமுமின்றி

எதிர்கொள்கிறேன்..

 

பின்பு நீயே

குளிரூட்டும் வார்த்தைகளைக்

காயத்திற்கு

மருந்தாக தரலாம்

என்பதால்..

 

&&&&&&&&&&&

 

மனப்புயலின் வேகம்

சற்று அழுத்தம்

குறைந்திருக்கிறது..

 

வார்த்தைகளினூடே

பற்றி எரிந்த வெப்பம்

தணிந்திருக்கிறது..

 

மெலிந்து கிடந்த

மகிழ்ச்சியின் ரேகை

விரியத் துவங்கியிருக்கிறது..

 

எப்படியோ

தெரிந்திருக்கிறதுனக்கு..

ஒற்றைப் பார்வையில்

எனது ஆர்வத்தை

திசைமாற்ற..

 

&&&&&&&&&&&&&&

 

ஏறக்குறைய

நமக்கிடையே

எல்லாம் சரியாகத்தான்

இருந்து வருகிறது..

உனது ஒப்புதலைத் தவிர..

 

&&&&&&&&&&&&&&&&&

 

நொடிதோறும்

மாறிவரும் சூழலுக்கிடையில்

எது குறித்தும்

நிச்சயமில்லைதான்..

 

நீண்டகால எதிரி

இக்கட்டான சூழலில் நட்பாகலாம்..

நெருங்கிய நண்பன்

தேவையான போது

விட்டுச் செல்லலாம்..

 

வேலையைப் பாராட்டி

உயர்வுக்கு வழி கிடைக்கலாம்..

ஒருமுறை தவறியதில்

இருக்கும் நிலையும் மாறிப் போகலாம்..

 

நட்பாகவே பரிமாறியது

காதலாகலாம்..

காதலாகவே ஊடாடியது

கசந்து போகலாம்..

 

இப்படி

எது குறித்தும்

நிச்சயமில்லைதான்..

நிச்சமாயிருக்கிறோம்

நீயும் நானும்

இதனூசலாட்டத்தில்..

 

&&&&&&&&&&&&&&&&&&&&

 

காரணங்கள் சொல்லி

விலகிச் செல்லவோ

நெருங்கிக் கொள்ளவோ

சூழல் முனையும்..

 

சூழ்நிலை

ஒன்றை விடவும்

ஒன்றைப் பெறவும்

துணிய வைக்கும்..

 

துணிவு

சூழலை ஆட்கொண்டோ

சூழலுக்கு அடிபணிந்தோ

செயலாற்றும்..

 

சந்தர்ப்பசூழ்நிலைகள்

விருப்பங்களையும்

வெறுப்புகளையும்

மாற்றிச் செல்லும்..

 

மனிதன்

சூழலால் உருவாக்கப்படுகிறான்..

மனிதன்

சூழலை உருவாக்குகிறான்..

 

எதுவோ இருந்துவிட்டு

போகட்டும்..

சந்தர்ப்பத்திற்கு வசப்படுபவன்

சாதாரணன்..

சந்தர்ப்பத்தைத் தன்வசப்படுத்துபவன்

சாதனையாளன்..

 

&&&&&&&&&&&&&&&

 

என்னுள்

தேங்கியிருந்த ஆர்வத்தையும்

மறைந்திருந்த ஆற்றலையும்

நீயே வெளிக் கொணர்ந்தாய்..

 

என்னுள்

படிந்திருந்த சோகத்தையும்

படர்ந்திருந்த கவலைகளையும்

நீயே துடைத்தெடுத்தாய்..

 

என்னுள்

உறங்கியிருந்த உணர்வுகளையும்

உறைந்திருந்த வார்த்தைகளையும்

நீயே உசுப்பி விட்டாய்..

 

அனைத்திற்கும் காரணமானாய்

எதற்கும் பொறுப்பேற்கவில்லை

இந்த கணம் வரை..

 

&&&&&&&&&&&&

 

ஒரு மொழி

இறந்து கொண்டிருக்கிறது..

ஒரு இனம்

அழிந்து கொண்டிருக்கிறது..

ஒரு வரலாறு

முடிந்து கொண்டிருக்கிறது..

ஒரு அனுபவம்

சிதைந்து கொண்டிருக்கிறது..

ஒரு உயிர்

துயரங்களால் பின்னப்பட்டிருக்கிறது..

ஒரு உலகம்

வெடித்துச் சிதற இருக்கிறது..

 

தேடுதலின்மையும்

புறக்கணிப்பும்

அக்கறையின்மையும்

வலிகளைச் சுமக்கப்பழக்கும்

வார்த்தை ஜாலங்களும்

கூட்டணி சேர்ந்து

நிகழ்த்திவிட்டன

அந்த கொடூர சம்பவத்தை..

ஒரு துயரம்

ஆட்சி பீடமேறிவிட்டது

 

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It