இரவு விழுதுகளை பற்றிக்கொண்டு
விண்ணேகும் இரவுப் பயணம்
உதட்டில் இரத்தச் சிவப்பையும்
பற்களில் பச்சை மாமிச வாடையுமாக
யட்சியின் பேருவை நேரில் கண்டதும்
தானாக பிடியை விடுகின்றன
பட்சியின் அலகுகள்

தூண்டிலைக் கவ்விய அலகுகளுக்கு
இனி தண்ணீர் சொந்தமில்லை
சுடும் மணலில் துள்ளும்
அப்பழுக்கற்ற உடலைப் பார்க்க பார்க்க
எச்சிலூறி சுவைக்கின்றன
கொக்குகளின் அலகுகள்

கொத்தி கொத்தி எடுத்து வந்த சுள்ளிகளின் மேல்
வைக்கோல் பரப்பி வனைந்த கூட்டை
விளையாட்டாகப் பிய்த்து எறிந்து விட்டு
சலனமற்று அமர்ந்திருக்கும்
குரங்கை பார்க்கும் போது
குத்திய முட்களின் வலியில் தெறிக்கின்றன
குருவியின் அலகுகள்

குத்திக் கொண்ட போதும் வலிக்கவில்லை
படிகளேறியபோதும் வலிக்கவில்லை
அப்பா போன அன்று வலித்தது
குத்திய இடமெல்லாம் அலகுகள்

- தங்கேஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.