1.

குடை மறைந்த நாட்களில்
மழையே குடை!

2.

மழை நிற்கும் வரை
காத்திருக்கலாமே
மழையில்!

3.

சண்டை போடாதிருந்தால்...
எப்போதோ பிரிந்திருப்போம்!

4.

என் காலத்தைக் குறைத்தவள் நீ.
முக்காலமெல்லாம் எனக்கு இல்லை
இரண்டு காலம்தான்:
நீ இருந்த காலம்
மற்றும்
நீ உடன் இருந்த
நினைவுகளோடு வாழும் காலம்.
இரண்டுமே பொற்காலம்!

5.

கனவிலாவது
வாயேன்.
கனவிலாவது
ஒரு கவிதை
நன்றாக எழுதிக் கொள்கிறேன்!

6.

ஒரு பைத்தியக்காரி
சருகை சூடியிருந்தாள்.
செடிகளில் உள்ள இலைகள்
மொட்டாய் காத்திருக்கின்றன
சருகாய் மலர்வதற்கு.
பாவம்... பூக்கள்!

7.

மூன்று சக்கர சைக்கிள்
வாங்கித் தந்த அப்பாவுக்கே,
சக்கர நாற்காலி
வாங்கக்கூடாதென
வருத்தமாய்
வாக்கர் வாங்குகிறான் மகன்.

- அ.சீனிவாசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.