கீற்றில் தேட...

கேட்பாரற்ற அறையிடுக்கில்
சிலந்தியின்
நூலிழைக் கூடுகள்

நொடிக்கு நொடி
அதனுள் சிக்கிக் கொள்கிறது
ருசியற்ற என் தனிமை

மெல்ல விழுங்கி
இடம் மாறுகிறது
சிலந்தியின் சத்யுகம்

களைக்கப்படாத கூடுகளில்
எஞ்சியிருக்கும் என்னை
தூசு தட்டுகிறது
மற்றொரு விழாக்காலம்!

***

ஒரு கூடு கலைகிறது
வெடித்த முட்டையை
அடைகாத்து அமர்கிறது
காட்டின் நிழல்!

***

சுரண்டப்படுகிற ஆற்று மணலில்
சலித்து
சாந்து கலந்து பூசப்படுகிறது
பாட்டனுக்கு பாட்டனின்
கடைசி முகம்!

***

போதாத உருவில்!

உன்னை
மறந்த அறையில்
என்னையும்
மறந்து உலவுகிறது
ஒரு வெறுமைச் சுடர்

கண்ணாடியில்
முகம் பார்க்கிறாயா?
பித்து பிடித்தவன் போல்
சுற்றித் திரிகிறாய்
என்கிறார் சிலர்

நாம் சேர்ந்து நின்ற
பிம்பங்களை சுமக்கும்
கண்ணாடிக்கு
என்னை பிரதிபலிக்க
எப்படி கற்றுத் தருவேன்?

நிகழ்வுக்கு வருவதில்
என்ன தயக்கமோ
என் அறைக்கு

உன் மாயத்தை
வெவ்வேறு கோணத்தில்
வடித்து விடுகிறது
உயிர் பெறாத
கடிகாரத்திற்கும்
அப்படியொரு அழுத்தம்

நீ விட்டுச் சென்ற
நிமிடத்தில் இருந்து
மீண்டும் துவங்குகிறது
ரணம்

என் அறையிலும்
அங்கே உன் அருகிலும்
காலம் வெவ்வேறு தான்

ஆங்காங்கே உலாவரும்
உன்னிடமிருந்து உதிர்ந்த
உன் தலை முடியில்
குரோமோசோம் பருகி
அடுத்த தலைமுறைக்கான
DNAவில்
உனது கதையை
நிரப்பிக் கொள்கிறேன்

உன் இருத்தல்
போதாத அறையில்
ஓர் பிரபஞ்சம்!

- ராஜேஷ்வர், சென்னை