கொதித்துக் கொண்டிருக்கும்
எனது தேநீரை
இமைக்காமல் நீ
பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அது உனது தேநீராகவும்
ஆகி விடுகிறது
கிளையிலிருந்து விடுதலை பெற்ற
முதிய இலையொன்று
பூமியைப் போய் சேர்வதற்குள்
சிறிய தவம் இயற்றி
முடித்து விடுகிறது
முத்தமிடும் போதே
ஞானம் பெற்றுவிடும் உதடுகள்
இதயத்திற்குள் இதயத்தை
கடத்தி விடுகின்றன
இந்த நொடிக்காகவே
காத்திருந்த கருங்கல் புத்தன்
யுகம் யுகம் கடந்த பின்பு
முதன் முதலாய் புன்னகைக்கிறான்
உள்ளிருக்கும் தேரை சீராக
சுவாசம் கொள்கிறது
- தங்கேஸ்