1. வீடு: உன் உலகம்
வீட்டிற்குள்ளே
உன் சொந்தம் மட்டுமே உலகம்.
வீட்டுக்கு மேல்
உலகமே உனக்குச் சொந்தம்.
2. மடி தேடும் படிகள்
வீட்டுக்கு மேலும் மேலும்
சாய்ந்து கொள்ள
ஒரு கூடுதல் மடி –
சில படிகள் தூரத்தில்.
3. போதிமரத்தின் நிழல்
கூரைக்கு மேல்
ஒரு பரந்து விரிந்த
போதிமரம் –
எட்டிப் பிடிக்கும்
ஞானத்தின் இலைகள்.
4. பஞ்சம்
ஆறில்லா ஊரில்
நீர்ப்பஞ்சம்.
மொட்டை மாடியில்லா வீட்டில்
அன்புப்பஞ்சம்.
5. படியேறும் வானம்
மொட்டைமாடிப் படிகள்
நேராக வானத்தைத் தொடும்;
ஒவ்வொரு அடியும்
உனக்கொரு கிரீடம்.
6. பிடிவாதங்கள் கழன்று
மொட்டைமாடிப் படியேறும்போது
பிடிவாதங்கள்
கீழே உதிர்கின்றன –
காற்றில் மிதக்கும்
வெறும் சொற்கள்.
7. தினசரி தபசு
நலமாய் வாழ
வருடம் ஒருமுறை
சபரிமலைப் படி.
ஆனால் தினந்தினம்
மொட்டைமாடிப் படி!
8. படியேறும் பரிணாமம்
படியேறினால்
கோபம் இறங்கி விடும்;
காதல் மேலேறும்.
நான் தினந்தோறும்
மொட்டைமாடிப்
படியேறும் பெருமாள்!
- அ.சீனிவாசன்