கொடூரமாய் தீர்ந்த
கொலைகார மழையில்
முங்கிய நகரத்திற்குப் பின்னோடிய
மும்பையை..

மீன்கூட்டங்கள் கண்ணாமூச்சாடிய
மணற்-அலை காதல்கள் நெளிந்த
மெரினாவைத் தின்று சுவாசித்த
பேய்ச்சுனாமியை..

முந்தாநாள்
முழுங்கிய ராசப்பனை
இன்னும் துப்பிவிடாது
இறகு விரித்திருக்கும் ஏரியை..

அம்மா விழிகளை
அவளறியாது விலகிய
குழந்தையொன்றின் விரல்களை
குறிப்பெடுத்த வெந்நீரை..

இதுபோல்..
அதுபோல்..
நீரின் தன்மையை
உவமைப்படுத்த ஒருபோதும்
உந்தாது மனப்பருந்து,
கடலொன்றின் நடுநாவில்
காய் நகர்த்தும்
என் அண்ணனைப்போலுள்ள
கப்பலோட்டிகளை
கவனிக்கும் பொருட்டு...

- ஆறுமுகம் முருகேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It