வீட்டினறை சுவர்களெங்கும்
கைக்கெட்டும் தூரம்
பென்சிலால் எழுதப்பட்ட
கிறுக்கல்கள்
சுவரின் மேல்பாதி
மொட்டையாக
அசிங்கமாகவும்
சுவரின் கீழ்பாதி
அற்புதமான
தொடரோவியமாகவும்
காட்சியளிக்கிறது
குழந்தைகளிருக்கும் வீடு

ஞானம்
******

ஞானமும் கிட்டுவதில்லை
புத்தரும் கிட்டுவதில்லை
மரத்திலில்லை ஞானம்
மனதிலிலுள்ளது
ஞானமென்பதை
மௌனமாக உரைக்கின்றன
போதிமரங்கள்
மௌனமொழி புரியாது
கடந்து செல்கின்றன
மரங்கள்

வாழ்க்கை
********

கண்ணாடித் தொட்டியின்
குறுகிய வட்டத்திற்குள்
சுற்றிக் கொண்டிருக்கும்
வண்ண மீனுக்கு
தெரிவதில்லை
தூண்டில் முள்ளின்
கூர்வலி

பெய்யெனப் பெய்யும் மழை
***********************

மழை பெய்ய தொடங்குகிறது
கொடியில் காய வைத்த
துணிகளைஉருவிக்கொண்டு
வீட்டிற்குள் ஓடுகிறாள்
குடும்பத்தலைவி
வாகன ஓட்டிகள் ஆங்காங்கே
நிழற்குடைகளின் கீழ்
ஒதுங்குகிறார்கள்
கூடுகளுக்குத் திரும்புகின்றன
புள்ளினங்கள்
பேரூந்துநிறுத்த நிழற்குடையில்
ஒடுங்கிப் படுத்தவர்
எழுந்து நிற்கிறார் கையில்
துணிமூட்டையைப் பற்றியவாறு

மழை விட்டதும்
அவரவர் விரைகிறார்கள்
அவரவர் இருப்பிடம் நோக்கி
ஈரமான தரை
ஈரமின்றி பறித்துச் செல்கிறது
அவரின் எஞ்சிய தூக்கத்தை
வாலாட்டியபடி வந்து
நிற்கும் மணிக்கு
பிஸ்கட்டை போடுகிறார்
தின்று முடித்து காலடியில்
படுத்துக் கொள்கிறது
நன்றியுரு
நீள்கிறது மழையிரவு
அவர்களுக்கு மட்டும்

- பா.சிவகுமார்

Pin It