தினமும் சாமி படங்களின்முன்
விளக்கேற்றியவள்
இன்று விளக்கின் முன் சாமியாக

அம்மா வேண்டுமென்று
அழுது அடம்பிடிக்கும் சின்னவளிடம்
சாமியைப் பார்க்கச் சென்றிருக்கும் அம்மா
இன்று வந்துவிடுவாளென்று சொல்லியே
தினமும் சமாளித்து வருகிறார் அப்பா

அக்காவிடம் அவ்வப்போது
சின்னச் சின்ன சண்டைகள் போடும் சின்னவள்
சொல்லிக் கொண்டே இருக்கிறாள்
அம்மா வந்ததும்
சொல்லி விடுவேன் என்று

பெரியவள்
பெரியவளான பின்புதான்
இன்னொரு அம்மா உருவாகிறாள்
இல்லத்தில்

சாமியை பார்க்கச் சென்ற அம்மா
இனியும் திரும்பி வர மாட்டாள்
என்றுணர்ந்த சின்னவள்
தினமும் வணங்கத் தொடங்குகிறாள்
அம்மா சாமியை

விளக்கேற்றியபின்
விளக்கின் வெளிச்சத்தில்
அம்மாவின் முகத்தைத் தேடுகிறது
அவளின் விழிகள்

***

வீட்டிற்குள் நுழைந்த வானம்

பட்டம் விட்டு
விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுவர்கள்
வீடு திரும்புகையில்
மறக்காமல் எடுத்துக்கொண்டு
வந்து விடுகின்றனர்
அவர்களின் வானத்தையும்

***

பரிசு

புதிதாக பிறந்த பறவைக்கு
வானத்தைப் பரிசளிக்கிறது
இயற்கை

***

வானம் தேடி ஒரு பயணம்

சிறகுகள் வரைந்து முடித்ததும்
பறக்கத் தொடங்கியது
பறவை

***

மரத்தடி வகுப்பு

வேப்ப அரச புங்கையென
பலவகை மரங்கள் சூழ்ந்த பள்ளிவளாகத்தில்
ஒதுக்கப்பட்டிருந்தது
ஒரு வகுப்பிற்கு ஒரு மரம்

மரத்தின் பெயர்களைச் சொல்லி
வகுப்புகளை அழைக்கும் பழக்கம்
எல்லோருக்கும் இருந்தது

நான்கு பக்க சுவர்களில்லை
வெயில் மழையை மறைக்கும் கூரையில்லை
இருந்தாலும் சொல்லிக் கொண்டோம்
வகுப்பறை என்று

எத்தனையோ முறை
சண்டையில் இடிந்து விழுந்திருக்கிறது
பூமிபூஜை போடாமலே நானும் நண்பனும்
சேர்த்துக் கட்டிய மண்வீடு

ஒவ்வொரு மாணவனும்
ஒரு குறளை வாசிக்க
வருகைப் பதிவேட்டில்
பெயரில்லாத பறவையின் குரலும்
சேர்ந்து கொள்ளும் எங்களுடன்
கண்முன்னே நிற்கிறது
கணிதப் பாடவேளையில்
நான்கு மாணவர்கள் கைபிடித்து
அழைத்து வந்த கால்முளைத்த கரும்பலகை

சுருண்டு இருந்த உலக வரைபடத்தை
தூக்கி நிறுத்த சமூக அறிவியல் ஆசிரியரின்
ஒப்புதலுக்குக் காத்து நின்ற
வளர்ந்த இரண்டு மாணவர்கள்

மணிஓசை இல்லாமலே
அவ்வப்போது மாணவர்களுக்கு
இடைவேளையைப் பரிசளித்த
காக்கைகள்

நீர் மூலக்கூறு உருவாவது பற்றி
வேதியியல் ஆசிரியர் சொன்னதை கவனிக்காமல்
மரத்திலிருந்து உதிர்ந்த பூவினை வைத்து
தாவரவியல் படித்த மாணவர்கள்

தேர்வுநாட்களில் மழை வரவேண்டி
மனதிற்குள் யாகம் வளர்த்த மாணவர்கள்

வேப்ப மரத்தின் கீழ் கற்ற கல்வி
இன்றும் இனிக்க
அமர்ந்து படித்த அத்தனை மரங்களும்
போதி மரங்களானது வாழ்க்கையில்

காற்றும் தந்து கற்றும் தந்த
மரங்களைக் காண
பால்ய கால நண்பர்களுடன்
ஊர்த் திரும்ப

மரங்களிருந்த இடத்தில் உருவாகியிருந்த
கட்டிடங்களின் சுவர்களில் வரைந்திருந்தது
மரக்கன்றுகள் நடும் மாணவர்களின் ஓவியம்

***

ஆரம்பப் பள்ளி

பள்ளிக்கூட முதல் மணி
காதுகளில் புகுமுன்
மகிழ்ச்சியைத் தந்த மரத்தடி ஆட்டம்

வராதவனுக்கும் சேர்த்துச் சொன்ன
வருகைப் பதிவு

சிறுநீர் பாய்ச்சி வளர்த்த
சின்னஞ்சிறு செடி

வீட்டுப் பாடம் முடிக்காத மாணவன்
மறைத்து வைத்த மூங்கில் குச்சி

வகுப்புத் தேர்விலிருந்து தப்பிக்க
வற்புறுத்தி வரவழைத்த வாந்தி
தற்காலிகமாய்த் தோன்றிய
தலைசுற்றல்

சத்துணவு வாங்கும் வரிசையில்
சகமாணவனோடு இட்ட சண்டை
ஆசிரியரையும் ஆயாவையும்
ஏமாற்றி வாங்கிய இரண்டாம் முட்டை

ஆசிரியர் இல்லாத நேரங்களில்
வகுப்பறையில் துள்ளிக் குதித்த
மாணவர்கள்
"மான்" அவர்கள்

பள்ளிக்கூட கடைசிமணி
காதுகளில் புகுந்த பின்
கும்பலோடு சேர்ந்திட்ட கூச்சல்

செய்த சேட்டைகள் அனைத்தும்
கை கட்டி வாய்மூடிக் கொண்டது
மாலைநேர டியூசன் எடுக்கும்
வகுப்பு வாத்தியார் வீட்டில்

***

செங்கல்சாமி

ஒவ்வொரு கடவுளுக்கும்
ஒரு கதை உண்டு
தான் வணங்கி வரும் சாமியைப் பற்றியும்
அம்மா ஒரு குட்டிக்கதை சொன்னதாய் நினைவு
எதிர்பார்ப்புகள் பெரிதாக எதுவுமில்லாமல்
இயல்பாக காட்சி தரும் இந்த சாமியும்
கடவுள் கணக்கில்தான் வருகிறது
உளிகொண்டு செதுக்கி
மறைந்திருக்கும் கடவுளை
வெளிக்கொண்டு வர வேண்டிய
அவசியம் எதுவுமில்லை
இரண்டுக்கு மேற்பட்ட கைகள் வைத்து
அவற்றில் ஆயுதங்களை
திணிக்க வேண்டிய தேவையுமில்லை
ஆடை ஆபரணங்கள் மீது ஆசையின்றி
ஒரு முழம் பூவையும்
மஞ்சள் குங்குமத்தையும் வைத்துக் கொண்டு
நடைசாத்தாமல் 24 மணிநேரமும்
அருள்பாலித்துக் கொண்டிருக்கிறது
வேப்ப மரத்தின் அடியில் குடியிருக்கும்
செங்கல்சாமி

- சீ.பாஸ்கர்

Pin It