பால் விற்கும் அக்கா
வரும் நேரம் ...
தம்பி தங்கை
பள்ளி செல்லும் நேரம் ...
அண்ணன் அலுவலகம்
செல்லும் நேரம் ...
அப்பாவின் வருகை நேரம் ...
காய்கறி விற்கும் பாட்டி
வரும் நேரம் -

என அனைத்தையும் வெளிப்படையாகச்
சத்தம் போட்டுச் சொல்லும்
கடிகாரம் -
அம்மாவுக்கான நேரத்தை மட்டும்
எல்லா முட்களையும் தாண்டி
ரகசியமாக மறைத்து
வைத்திருக்கிறது பின்புறம் !

- நல முத்துகருப்பசாமி

Pin It