1.

இந்தப் பாதி சிகரெட் பாக்கெட்டைப் பத்திரப்படுத்த வேண்டும்
இந்தப் பாதி போத்தல் மதுவையும் பத்திரப்படுத்த வேண்டும்
அவனின்று வரும் போது தூங்கிவிட வேண்டும்
முடிந்தால் இன்றிரவே இறந்து விட வேண்டும்.
அவன் தொங்கிய கயிற்றின் பிரிகளில் கொஞ்சமாக
அவனது வாசனை வந்து கொண்டேயிருக்கிறது.

2.

கடல் பார்த்துக் கொண்டிருக்கிறது
பூமியில் பகல் முடிந்து இரவு வருவதை.
ஒரு நட்சத்திரத்திற்கு கீழே நின்று கொண்டிருந்தவன்
நேற்று தன்னலையில் சிக்கியவன் போலிருக்கிறான்.
அவனைத் திரும்பவும் இழுத்துச் செல்ல முயன்று
ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறது கடல்.
அவன் சிரித்துக் கொண்டேயிருக்கிறான் இரவு முழுவதும்
மிக அவசரமான ஒரு பயத்தில்.

3.

வேறு எல்லா வழிகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன.
அவளை கடைசியாகக் கொண்டு சென்ற பாதையில்
இரவே வருவதில்லை.
நான் தூங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்.
என்னை முதலில் எங்கிருந்து துவங்க வேண்டும்.
அக்கல்லறையிலிருக்கும் காய்ந்த பூக்களிடம் யாரேனும்
கேட்டுச் சொல்லுங்கள்.

4.

வெறும் சதைகள் தான் பிளந்திருக்கின்றன
அவளின் நினைவுகள் நன்றாகத் தானிருக்கும்.
ஒரு முறை என்னைப் பார்க்க விடுங்கள்
அவளுக்கு என்னை கட்டிக்கொள்ள வேண்டும் போலிருக்கும்.
இவ்விரவின் சுற்றுப் பாதையை
அந்த விபத்திற்கு முன்பிருந்து எப்படியாவது திருப்ப வேண்டும்.

5.

இந்த இரவு காய்ந்து கிடக்கிறது
காயமொன்றிற்காக அழுது கொண்டிருக்கும் சிறுமியின்
பிஞ்சு கைகளைப் இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருக்கிறது இருள்.
வலி
ஒரு உறவைத் தேடி வந்து பார்க்க வைத்திருக்கிறது.

6.

இந்த இரவிடம் எந்த பதிலுமிருப்பதில்லை
அதனிடம் சில இருளிருக்கின்றன.
அதனால் அது இரவாகியிருக்கிறது.
அதனால் அது திருப்தியாகயிருக்கிறது.

- ஜீவன் பென்னி

Pin It