பசித்தழும்
குழந்தையை ஏமாற்ற
பொம்மையைக் காட்டினேன்.
குழந்தை மௌனமாக
அரற்ற ஆரம்பித்தது பொம்மை.

செத்துப்போன
அப்பத்தாவின் தாலாட்டு
இன்னமும்
ஆட்டிவிட்டுக் கொண்டிருக்கிறது
என் வீட்டுத் தொட்டிலை.

நடைவண்டி ஏதுமற்று
எழுந்து நிற்கும்
குழந்தைகளை
உடனடியாகப் பிடித்துத் தள்ளுகிறோம்
பள்ளிகளில்.

உருவாக்கப்படாத
அகராதிகளில்
நிறைய இருக்கின்றன
குழந்தைகளின் மொழிகள்.

தூக்கத்தில்
மௌனமாக சிரிக்கும்
குழந்தைகளிடம்
என்ன பேசியிருப்பார்
கடவுள்?

ஒவ்வொரு பெண்ணின்
ஸ்பரிசத்திலும்
குழந்தை பருகுகிறது
பாலின் வாசனையை.

உன்னைப் போலவே
இருக்கிறது
குழந்தையென்ற
என் தந்தையிடம்
அவரது தந்தையும்
கேட்டிருக்கக்கூடுமோ
இதே வார்த்தையை?

-ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It