என் தூக்கத்தில் இருந்து கைநழுவிய
புத்தகத்தின் பக்கங்களுக்கு
விழிப்பின் சாயல்.

***

பறந்து செல்ல விரும்பும்
மரங்களின் உணர்வுகளை
பறவைகள் தன் கால்களில்
தூக்கிச் செல்லும் அழகில்
கிளைவிரித்து நடனமிடுகிறது
ஆனந்த பெருக்கில் மரங்கள்.

ஒரு மரம் மற்றுமொரு
மரத்தில்
அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறது
பறவைகள் ஓய்வெடுக்கும்
கணத்தில்.

அவ்வப்போது வரும்
பூனைக்குட்டி ஒன்று
இப்பொழுதெல்லாம்
வருவதில்லை
அது பாத்திரத்தை
திறக்கும் சப்தங்களும்
கேட்பதில்லை
அடுக்கு மாடிக்குடியிருப்புகளுக்கு
எப்படித் தாவிச் செல்வது
என யோசித்து விட்டு
மரசெடிகளுக்கு இடையில்
மறைந்திருந்து
சட்டென்று சாலையில்
குறிக்கிட்டு கடந்து விட்ட கணத்தில்
சாம்பல் பூனைகளாய்
தவிக்கிறது மனங்கள்
ஒரு ஜன்னல் கதவையாவது
திறந்து வையுங்கள்.

ஒரு பூனை
சில நட்சத்திரங்களையாவது
வரவேற்கட்டும் கதவொளி.

கதவு என்றால் வசந்தத்தை திறந்து
வரவேற்றுதானே ஆக வேண்டும்.
அழகான சாம்பல் கால் தடங்களை
பதித்த பூனையை
எப்படி அனுமதித்தது அந்தக் கால அடுப்பு ?

- ப.தனஞ்ஜெயன்

Pin It