பல்லிடுக்கில் மாட்டும்
விதைகள் ஏதுமற்ற
திராட்சைக் கனிகளைத் தின்றவன்
எல்லாக் கனிகளும்
விதையற்றதாக இருக்க வேண்டுமென
தோட்டத்தில் சொல்லிக் கொண்டிருந்தான்.

அடிமையாய் வேலை செய்யும் மகளிருக்கு
குழந்தைகள் ஏதுமற்ற
சுவை நிரம்பிய கருப்பைகள் வளர்ந்திருப்பது
அவனுக்குப் பிடித்திருந்தது

அறுவடைக்குப் பின்
அவர்களைக் கொன்று புதைத்த
கருப்பைகளிலிருந்து பெருகும் குருதி
பழச்சாற்றின் மணத்துடன்
அங்கே பரவியிருந்தது

சந்தைக்குச் சென்று
விதையற்ற கனிகளுக்கான
விதைகளை வாங்கி வருமாறு
புதிதாக அடிமையாக்கப்பட்ட
பெண் குழந்தைகளைப் பணித்தான்

தப்பித் தவறி
ஒரு விதைவிட்ட கனி வளர்ந்தாலும்
அவர்களின் தலைகளைத்
துண்டிக்க வேண்டும் என்று
ஆணையிடப்பட்டிருந்தது

தன் கருப்பையில்
யாருக்கும் தெரியாமல்
குழந்தை வளர்த்திருந்த பெண்
பேறுகாலத்திற்காக
தப்பிக்க நினைத்திருந்தாள்

சந்தையிலிருந்து வந்தவர்கள்
எல்லாக் கனிகளின் முன்பும்
நச்சுப் புகையடித்து
நிறைசூலியை அழுகச் செய்து
புதைத்தனர்

பழச்சாற்றுக்குப் பதிலாக
கருப்பைகளின் குருதியைக் குடித்து
விதைகள் இல்லாத
மரத்தினடியில்
அவர்கள் நடனமாடிய போது
மண்புழுக்கள்
முட்டைகளை இட ஆரம்பித்தன.

- இரா.கவியரசு

Pin It