இதுவும் கடந்து போகும்
என புத்தர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை
சந்தேகமாக‌த்தான் இருக்கிறது
எதுவும் கடந்து போகவில்லை எங்களை
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையும்
அப்படியேதான் இருக்கிறோம்
நவீனமய சுரண்டலில்
அதிகார நெடுஞ்சாலைகளின் அத்துமீறலில்
சமாதியானது எமது வயல்களின் விதைகள்.
கான்கிரீட் கிழித்த கனவுகள்
விரட்டியடிக்கப்பட்ட கால்நடைகளின் உரிமைகள்.
உங்கள் தலைவன்
வீட்டுக் கண்ணீர் அஞ்சலி
காதுகுத்தல்
பிறந்த நாள் பேனர்களே
எங்களுக்கும் எங்களைப் போன்றோர்
ஒதுங்கிட மழைக்கும்
ஒழுகாத டிஜிட்டல் குடிசைகளாய் ..
இதுவும் கடந்து போகுமென
புத்தர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.
வாக்களிக்க ரேசன் கடையில் வரிசையில் நிற்க
மனு எழுதி கால்கடுக்க
புத்தனுக்கு வாய்க்கவில்லை போலும்..
போதி மரத்தடியிலேயே கிடந்து ஞானம் பெற்றவனுக்கு
எங்கள் வானம் தெரியவாப் போகிறது.
எதுவும் கடந்து போகும் எம் நிலத்தின் மேல்..
புதிய இந்தியாவின் அகோரப் பசிக்கு
எங்கள் பிணங்கள் மட்டும்
அப்படியே கொத்துக்கொத்தாய்
மண் விழுங்கும்..

- சதீஷ் குமரன்

Pin It