மொட்டை மாடிகளில்
தவளை ஓட்டப் பந்தயம்
விளையாடும் குழந்தைகள்
எல்லைக்கோட்டை தொடுவதற்குள்
தவளை மரபணு மாறி
எழுந்து ஓடுகிறார்கள்.
நவீன ஆடைகள் உடுத்தி
பன்னாட்டு உணவுகள் பானங்கள்
குடித்து கும்மாளம் அடிக்கிறது
குழந்தைகளின் கார்ட்டூன் தவளைகள்.
கொசுக்கள் தின்ன
கற்றுத் தரவில்லை தொழில் நுட்பத்தில்.
கொசுக்கள் மறந்த தவளைகளின் மரபணு
உருளைக்கிழங்காய் உருள்கிறது
சமையல்கட்டிலும் வயிறுகளிலும்.
தவளைகளற்ற நீர்நிலைகளில்
மூச்சடைத்து செத்து மிதக்கிறது
மரபணு கொன்ற ஞெகிழிகள்.
இனி தவளைகளைக் காட்டுவதற்கு
கூகுள் வரைபடத்தில்
வயல்களைத் தேடி
குழந்தைகளை அழைத்துச்செல்ல
இந்த சனி ஞாயிறுகளிலாவது
வாய்க்க வேண்டும் காலம் ..!

- சதீஷ் குமரன்

Pin It