அகழ்ந்து 
கொண்டிருக்கும்
சொற்கிடங்கை 
நிரவி இருக்கிறது துளிர்வானம்

00

இன்னும் என்ன
மழையும் மழைநிமித்தமும்
நிலவும் சூரியனும் 
வராமலா போகப்போகிறது 
நீ துமி

00

கொடியில் காயும் 
அக்குழந்தைச் சட்டையில் 
சேமிக்கப்பட்டிருப்பது 
எந்தத் தேன்சிட்டுச்சிறகோ
இத்தனை லாவகமாய் 
மூச்சை உள்ளிழுத்து உள்ளிழுத்து 
வானம் அமைக்கிறது 

00

குறுக்கு வழிச்சந்தின் 
ஒற்றையடிப்பாதை 
விரிந்து கிடக்கிறது
இடையோடும் புல்வெளியின்
நசுங்கும் ஒலி 
நாடற்றவனின் பாடல்

00

புத்தக வாசம் இழந்த
நீண்ட இரவுகள் 
மறுதலித்துக் கேட்கிறது 
சாவு மணி 

00

விடைபெறல் என்பது 
வார்த்தை நிகழ் 
மேலும் 
மனவடி நிழல்
வாழ்வின்
தடயங்களேதுமில்லை 
மண்டையோடுகளும் 
மார்புக்கூடும்
எலும்புத் துண்டங்களும் தவிர

00

இரண்டு கண்கள் மட்டுமே இருக்கின்றன
ஊனமுற்ற வனத்தில் 
அகம் சிதைக்கிற
கணப் பார்வைக்காக

00

காற்றுக்குப் பதிலி 
காற்றுத்தானே
ஈரத்திற்கும் பதிலி 
ஈரமாகத்தானே 
இருக்க வேண்டும்

00

பனிவெளியில் 
முகில் மூட்டம்
சேகரித்த சிறகுகளில் ஒன்று கதவிடுக்கில் நீலம்பாரித்து

00

இலை நெய்து
கொண்டிருக்கிறேன்
சிறகுகள் தோள்களில் 
முளை கொள்ளும் வரை
பூவைக் கிள்ளிக்கொள்

00

தொலைந்து போன 
நிலைக்கதவுகளை 
தேட வேண்டியதில்லை
திறப்பது இலகுவானது தான் 
உலகுக்கு

00

மழையில் கரைந்து
கொண்டிருந்தது ஈரம் 
ஈரத்தில் நனைந்து
கொண்டிருந்தது மழை 
நடுவானில் நான்

00

யாருமற்று கிடக்கிறது
என் பிணவறை
கடலால் வழிகிறது தெரு
நாணலை வரைந்து 
கொண்டிருக்கிறேன்

00

இலை உதிர்ந்த 
மோப்பிள்களில் 
கூடுகிறது 
தேசப்பறவை
கூடவே நிழலை
வனமிட்டிருக்கிறேன்

00

சிலுவையை
தோள் பையில் 
இட்டுச் சுமக்கிறேன் 
அறைதல் தோள்பட்டையில் 
என்பது தெரியாமல்

00

தேம்ஸ் 
நதிக்கரையில் 
உன் குரல் பூத்திருந்தது
நான் சில்வண்டு 
என்பது தெரியாதா

00

ஆனாலும் 
பனி பொழிந்து கொண்டிருக்கையில் 
கண்ணீரை முத்தச்சரடால்
துடைத்திருக்க வேண்டாம்

00

வேரின் நுனியில்
இளைப்பாறுவேன் 
நரம்பறுந்த வீணையின் சுருதி சருகெனவா  எரிக்கிறீர்கள்

00

மன நெரிசலிலும் 
தளிர்த்து விடிந்திருந்தது 
வரைந்து தீட்டி 
கைகளை பறத்தி விரித்தலில்
கற்றல் என்பது 
கற்பித்தலில் இல்லை

00

வழக்கம் போலவே புலர்வு
வழக்கம் போலவே எல்லாம் 
வழக்கம் மட்டுமே 
வழக்கமாக இல்லை

00

மீண்டும் ஒரு முறை 
துள்ளி விழுகிறது 
குமிழிச்சிரிப்பை 
ரசிக்க ஆசைப்பட்டு மீன்

00
 
மழையிரவின் ரயில் பயணம் 
பிடில் வாசிக்கும் பனிப்பொழிவு
எதில் நனைய 
நூலென வா

00

இருளின் மௌனம்
பிரியும் வரை
ஒளியின் நாவு 
உச்சரிப்பதில்லை  
இருளினுள்
ஒளியன்றி வேறேது

00

இரவைச் சுருட்டி 
முள்ளாய் குத்தும்
இந்த பனிப்புயலுக்கு 
சலனமற்றுப் பூத்த 
சாவின் சாயல்

00

குழந்தைகளால் மட்டுமே 
பகிர்ந்தளிக்க முடிகிறது 
சிதறாத வானத்தை
அது மறுமுறையும் 
திண்டாடுகிறது

00

மூச்சின் நிழலில்
அமர்ந்திருக்கிறேன்
எனக்கு முன்
சாவின் உசாவலை
நிர்ணயிப்பது எது

- தமிழ் உதயா, லண்டன்
Pin It