அந்தக் கிழவியின் 
ஈரக் கண்களைத் தாண்டி தான் 
நீங்கள் உள்ளே வந்திருக்க முடியும் 
 
இலையில் நீர் தெளித்து 
வழிக்கையில் அந்தக் கிழவியின்  
உள்ளொடுங்கிய கன்னம் நினைவுக்கு
வரத்தான் செய்யும்
 
கூட்டு பொரியல் அவியல் வைத்து 
அப்பளம் நொறுக்குகையில் 
முழங்கால் கட்டி அமர்ந்திருக்கும் 
அந்தக் கிழவியின் தோற்றம்  
உடைந்த சித்திரமாக உதிரும்   
 
சுடச் சுட சாதம் பரிமாறப்படுகையில்  
பருப்பும் நெய்யும் ஊற்றிப் பிசைகையில்  
அந்தக் கிழவியின் இடுங்கிய பார்வை 
கையில் தட்டுப்படும்  
 
புளிக்குழம்பு ரசம் தயிர் பாயசம் என  
முடித்து இலை மூடி எழுகையில் 
அந்தக் கிழவியின் தொண்டையில் 
இறங்கிய ஏக்க விழுங்கல் 
உங்களை விழுங்கும்  
 
மீண்டும் கண்டும் காணாமல் 
அந்தக் கிழவியைக் கடந்து 
வீடு சென்று சேர்கையில் 
முதல் முறையாக நீங்கள் செத்திருப்பீர்கள்
 
உங்களை உதாசீனப்படுத்தி 
முகம் திருப்பி படுத்திருக்கும் 
உங்கள் செல்ல நாய் நீங்கள் 
உயிரோடிருப்பதைப் புறக்கணித்திருக்கும்...!
 
- கவிஜி 
Pin It