ஊரெங்கும்
வேரோடி வளர்ந்திருந்த
ஒற்றை மரம்
கருணை, வீரம், தியாகம் எல்லாமாக
நம்முள்ளும் நிறைந்திருந்தது.
எப்படியோ
குருவிச்சை ஒட்டிற்று..
கிளைகளுக்குள் சலசலப்பு.. முறுகல்...
சிணுங்கல்.. முனகல்..கோபம்... இப்படி...
தனித்தும் இயங்கலாம்.. முளைக்கலாம் என்று
குருவிச்சை மூளைச்சலவை
செய்து பார்த்து வெற்றியும் கண்டது..
பூக்கள் வேறாகின..
கிளைகள் பிரிந்தன...
மரத்தையே சாய்த்ததாய்
குருவிச்சை நினைத்து,
மரத்தின் வரலாறு தெரியாமல்
குதூகலித்து நின்றது..
வேர்களை நினைத்து
சில மரங்கள்
ஆராய்ச்சி செய்தன.
ஆகா வேர்களும்
இனி முளைக்கும் சாத்தியம் இல்லை
என பல குருவிச்சைகள் கூடிக் களித்தன.
ஆணிவேர் பற்றி
புரியாமல்,
வரலாறும் தன்னை எழுதிக் கொண்டது.

- முல்லை அமுதன்

Pin It