நறநறக்கும் புழுக்களோடு ஆவென
கிடப்பது தான் ஈக்கள் மொய்க்கும்
உங்கள் வேதாந்தம்

வெட்டுண்ட கழுத்தும் வெந்த நெஞ்சும்
பேரின்பம் உங்களுக்கு
பெரும் வேதனை பெற்றவனுக்கு

உங்கள் விருப்பத்துக்கு கழுத்தறுங்கள்
வகை வகையான கழுத்துக்களோடு
காதலர்கள் நிறைந்த நாடு தான் இது

குறி அறுங்கள்
குதர்க்கம் பேசி சாதி வளருங்கள்
வெட்கக் கேடுக்கு சாதி சாக்காடு

நயநயக்கும் மீசை முறுக்கலில்
கருப்பும் வெள்ளையும் தான் இயல்பு
சாயம் பூசுதல் அயோக்கியத்தனம்

ஆண்டு கொண்டே இருப்பது
புழுக்களை தின்று விட்டு
புரண்டு கொண்டே இருப்பது

ஆணவக் கொலையை வீரம் என்பது
மூச்சு முட்ட வாந்தி எடுக்கும்
கோரத் தத்துவம்

உள்ளாடைக்குள் உயர் பூட்டு போட்டு
மணியாட்டும் அதிகாரம்
அம்மணமாகும் நாள் வரும்

சாதிக்கு வாள் எடுத்தவன்
படுக்கையில் பாதி பிணம்
எழுந்திருக்கையில் மீதியும் பிணம்

நுண்புயல் மீறும் நசநசப்புகளை
தாவிக் கொண்டே திரியுங்கள்
சல்லித் தனங்களோடு ஒரு நாள் எரியும்
உங்கள் பிணங்களும்....!

- கவிஜி

Pin It