karur honourkillingபொதுவாக சாதி வெறியை பற்றிய கருத்தோட்டங்கள் அனைத்தும் தலித் எதிர் சூத்திர சாதி, தலித் எதிர் பார்ப்பனர்கள், சூத்திரர்கள் எதிர் பார்ப்பனர்கள் என்றே கட்டமைக்கப் படுகின்றன. இவை எல்லாம் சமூகத்தில் அப்பட்டமாக ஊடாடுவதால் அதைப் பற்றிய பிரஞ்சை சற்று அதிகமாகவே இருக்கலாம்.

ஆனால் மிக நாசுக்காக, வஞ்சகமாக வாய்ப்பு கிடைத்தால் கழுத்தறுக்க காத்திருக்கும் சூத்திரர்களுக்குள் உள்ள முரண்பாட்டை சாதியத்தை எதிர்க்கும் பலர் கண்டுகொள்லாமல் கடந்து சென்று விடுகின்றார்கள்.

உண்மையில் சாதிய கட்டுமானத்தில் மிக அதிகமாக நசுக்கப்படும் மக்களாக தலித்துகளுக்கு அடுத்தப்படியாக சூத்திரர்களில் மிக கீழ்நிலையில் இருக்கும் சேவைத் தொழில் புரியும் சமூதாய மக்களே உள்ளார்கள். சலவைத் தொழில் செய்பவர்கள், முடி திருத்துபவர்கள், கைவினை பொருள் செய்பவர்கள், தச்சு வேலை செய்பவர்கள், மரம் ஏறுபவர்கள் போன்றோர் சமூகத்தில் தன்னை பிற சூத்திர சாதி மக்களுக்கு ஒரு போதும் சரி நிகராக நினைக்க முடியாத வண்ணம் அவர்களின் மீது அதே சூத்திர நிலையில் உள்ள சமூகங்களால் சாதிய மேலாதிக்கம் கடைபிடிக்கப் படுகின்றது.

பிற்படுத்தப்பட்டவர்கள், மிக பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள் என சாதி ரீதியாக பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டாலும் ஒவ்வொரு வகைகுள்ளும் சாதிய முரண்பாடுகள் எழாமல் இருப்பதில்லை.

குறிப்பாக பல சேவை தொழில் செய்யும் சாதிகள் மிகவும் பிற்படுத்தப்படவர்கள் என பொதுவான பெயரில் அழைக்கப்பட்டாலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் உள்ள மற்ற சாதிகளால் தனக்கு சேவை செய்து வருமானம் ஈட்டும் சாதிகளை அவ்வாறாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

அதன் வெளிப்பாடு தொடர்ச்சியாக எல்லா தளங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. சமூகம் அரசியல், பொருளாதாரம் என அதன் வீச்சு பல்கிப்பெருகி உள்ளது. தனக்கு குறிப்பிட்ட சேவையை செய்து வருமானம் ஈட்டும் ஒருவன் சமூக தளத்திலோ இல்லை அரசியல் தளத்திலோ தன்னைவிட உயரிய நிலையை அடைவதை சனாதன சூத்திர சாதி வெறி தடுக்க முற்படுகின்றது. முடிந்தால் அதை அழிக்க துடிக்கின்றது.

சனாதனத்தில் சரி நிகர் என்று எதுவுமில்லை. ஒன்றுக்குக் கீழ் ஒன்று. ஒன்றைவிட இன்னொன்று தாழ்ந்தது. கீழிருந்து மேலே செல்லச் செல்ல பிரம்மத்தையும் அதாவது புனிதத்தையும் மேலிருந்து கீழே செல்லச்செல்ல தீட்டையும் அது வலியுறுத்துகின்றது.

அப்படியான இறுக்கிப் போன சாதி வெறிதான் தன் சக மனிதனை துடி துடிக்க கொன்றுபோட தூண்டுகின்றது. ஒரே வர்க்கத் தட்டில் இருந்தாலும் சேவை தொழில் செய்பவர்களைவிட தானே பார்ப்பானின் மிகச் சிறந்த வைப்பாட்டி மகன்(சூத்திரன்) என்று நிரூபிக்க அவர்கள் மனத்தால் அலைக்கழிக்கப் படுகின்றார்கள்.

அப்படிப்பட்ட சூத்திர மன அலைக்கழிப்பால்தான் இன்று கொலை செய்ய பட்டிருக்கின்றார் ஹரிஹரன்.

கரூர் காமராஜர் ரோடு பகுதியில் சலூன் கடை நடத்திவந்த ஹரிஹரனும் இவரின் கடைக்கு எதிரேயுள்ள தெற்குத் தெருப் பகுதியைச் சேர்ந்த இரும்புக்கடை நடத்திவரும் வேலன், தேவி தம்பதியரின் மகளும் காதலித்து வந்துள்ளனர்.

இருவருக்கும் வர்க்க நிலையிலும் பெரிய வேறுபாடு இல்லை என்றாலும் ஹரிஹரன் சேவை தொழில் புரியும் சாதி என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு இருந்துள்ளது.

பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி இருவரும் காதலித்ததால் ஹரிஹரனிடம் தனியாக பேச வேண்டும் என அந்தப் பெண் மூலமே கோயிலுக்கு எதிரே வரவழைத்து மீக கொடூரமாக அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்திருக்கின்றார்கள்.

ஹரிஹரன் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் தான் காவல் நிலையம் இருந்தது என்பதும் 30 நிமிடங்களுக்கு மேலாக யாரின் எதிர்ப்பும் இன்றி ஹரிஹரன் சாதி வெறியர்களால் சாகவாசமாக கொல்லப் பட்டிருக்கின்றார் என்பதும் இந்த ஆட்சியில் காவல்துறையின் தடித்தனத்தையும், பொதுமக்களின் பிழைப்புவாதத்தையுமே காட்டுகின்றது.

குறிப்பாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி பதவியேற்றபின் சாதி ஆணவ படுகொலைகள் கட்டற்று பெறுகியுள்ளன. 2012 முதல் 2017 வரை மட்டும் தமிழ்நாட்டில் 187 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தில் 12 நாட்களுக்கு ஒரு ஆணவ கொலை நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சமூகத்தில் இப்படியான போக்கு தொடர்ந்து நீடிப்பதற்கு காரணம் சமூகம் அதை மனதளவில் அங்கீகரிப்பதே ஆகும். கருத்தியல் ரீதியாக மிக வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ள சாதிய சிந்தனைகள் ஒவ்வொரு மனிதனையும் கற்பனையாக தன்னைத்தானே உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் பிரம்மை கொள்ள வைக்கின்றது.

அப்படியான பிரம்மை களைந்து போவதை சாதியைத் தவிர சொந்தம் கொண்டாட ஏதுமில்லை என்ற அற்ப நிலைக்கு மனிதர்களை தள்ளுகின்றது.

தன்னுடைய சக மனிதனை நேசிப்பதை காட்டிலும் அரவனைத்து அன்பு செலுத்துவதை காட்டிலும் தன் வாழும் பிரம்மையான சாதிய உலகம் மிக முக்கியமானதாக தெரிகின்றது. நம்முன்னால் உள்ள மிக முக்கியமான பணி அந்தப் பிரம்மையை உடைப்பதுதான்.

சட்டங்கள் மிக கடுமையாக்கப்படுவது மட்டுமே அந்த பிரம்மையை உடைக்க போதுமானதல்ல. ஆரம்பக் கல்வி முதலே சாதி என்பது இழிவான அருவருக்கத்தக்க ஒன்று என்பதையும் அதை கடைபிடிப்பவன் மனிதனாக வாழவே தகுதியற்ற அற்பபதர்கள் என்பதையும் புரிவைக்க வேண்டும்.

ஆனால் பெரும்கொடுமையாக கல்வி நிலையங்களே சாதியைப் போதிக்கும் மையங்களாக மாறி இருப்பதுதான் அவலமாகும். மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலோர் சாதி வெறியர்களாகவும், மத வெறியர்களாகவும் கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகளாகவும் இருக்கும் போது நாம் எங்கே அடிப்படையான சிந்தனை மாற்றத்தை சமூகத்தில் கொண்டுவர முடியும்?.

ஜனநாயகம் என்ற போர்வையில் அரச கட்டமைப்பே சாதியைக் கட்டிக்காக்கும் போது சமூக இயக்கங்கள் எவ்வளவுதான் முனைந்து சாதிய கட்டமைப்பை தகர்க்க முயற்சித்தாலும் அதனால் பெரிய அளவிலான பலன்களை அடைய முடியவில்லை என்பதுதான் உண்மை.

ஹரிஹரனின் படுகொலை தெளிவாகவே சூத்திர சாதிகளுக்குள் நிலவும் முரண்பாடுகளை வெளிச்சப்படுத்தி இருக்கின்றது. சூத்திரக் கூட்டத்திற்குள்ளேயே தங்களை சற் சூத்திரர்கள் என்று அழைத்துக் கொண்டு மற்ற சூத்திரசாதி மக்களை இழிவு படுத்தும் இவர்கள் அதற்காக ஒருபோதும் வெட்கப்படுவதில்லை.

சற் சூத்திரர் என்றால் ‘நல்ல சூத்திரர்’ என்று பொருளாகும். அதாவது பெரியாரின் மொழியில் சொன்னால் ‘நல்ல தேவடியாள் மக்கள்’ என்பதே சற்சூத்திரர் என்பதற்குப் பொருளாகும்.

சமூகம் மிக ஆழமான சாதிய பிளவுகளுக்குள் சென்றுகொண்டு இருக்கின்றது.சாதியை வெளியே சொல்வது அவமானம் என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி பொதுவெளியில் சுயசாதி பெருமை பேசுவதை வீரமாகவும், தன்னால் இழிவாக கருத்தப்படும் சாதியை சேர்ந்தவர்களுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுப்பதும் இயல்பாக மாறி இருக்கின்றது.

இந்த அரசு கட்டமைப்பு நிச்சயம் சாதியை ஒழிக்காது என்பதைவிட சாதிய முரண்பாடுகளை கூர்மையடைய செய்வதன் மூலம் ஒட்டுமொத்த சமூகமும் சுரண்டப்படும் போது இயல்பாகவே எழ வேண்டிய சமூக கோபத்தில் இருந்து மடைமாற்ற வல்ல ஆயுதமாகவும் அதைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றது.

ஆனாலும் சாதியாலும் மதத்தாலும் பிற்போக்குத்தனத்தாலும் இந்த சமூகத்தில் எந்த உயிருக்கு கேடு நேருமென்றாலும் அதற்கு எதிராக போராடுவதும் குரல் கொடுப்பதும் மனித விழுமியங்களை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிப்பதுபோல பெரும் சமூக மாற்றம் ஒன்று ஏற்பட்டு இந்த சாதி ஒழிக்கப்படும்வரை சாதியால் பாதிக்கப்பட்டு அரைமென்டல்களாக சமூகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் அற்பபதர்களுக்கு நாம் முதலுதவி சிகிச்சையை கருத்தியல் ஆயுதத்தால் வழங்க வேண்டும். தற்போதைக்கு மென்டல்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு அது ஒன்றே வழியாகும்.

- செ.கார்கி

Pin It