ஒரு காலமிருந்தது

பால்யத்தோழன் சாதி. ..
எதுவெனத் தெரியாமலிருந்தது...

பக்கத்து அக்கத்து வீட்டாரை உறவு சொல்லியழைத்து
வைபவங்களின் வேர்களில்
நேசநீர் ஊற்றியக் காலமொன்றிருந்தது

ஏதும் விபத்தெனில் தன்பணி விடுத்து
ஓடி உதவி குருதி கொடையளித்த
வேறுபாடுகளின் வண்ணமறியாக் காலமொன்றுமிருந்தது...

பம்பர..கோலி..பட்ட..பல்லாங்குழி
கண்ணாமூச்சி.. தாயமெனக்
கூட்டுச்சேட்டைக் காலம் குஷியும் ருசியுமானவை

"காக்காக்கடி" யின் மதிப்பறிவரோ
நாளதின் விரல் வித்தகர்

பண்டம் பரிமாற்ற பண்டிகைகள்
பெருங்கூட்டத் திருவிழா..
கூத்து..திரைப்படம் என
உறவும் நட்பும் இழைந்து நெய்தக்
காலமொன்று இருந்ததே..

கேபிள் வயர்கள்.. முட்டாள் பெட்டிகள்... கைபேசி சிறைகள்
பிரிக்கும் பேத அரசியல்..
அந்த நன்னீரில கலக்காத காலமிருந்தது....

இப்பொழுதும் பார்க்கக்கூடும் நீங்கள்
மியூசித்திலடைத்த காலமதின்
எலும்புக்கூட்டினை....

- அன்பாதவன்

Pin It