தூற்றலில் பல்லாயிரம் வெள்ளிகள்

மண்மேட்டில் உதிர்ந்து சிதறிக் கிடக்கின்றன
இருந்தும் என் முற்றத்து வேம்பு
இன்னும் மொட்டுக்களை முகிழ்த்தி
சிரித்தே நிற்கிறது
அதற்கு சிரிப்பதைத் தவிர
வேறொன்றும் தெரியாது

என் வானம் பால் சிந்திக் கொண்டிருக்கிறது

பூமி ஏன் விடமுண்ண வேண்டும் நீலகண்டா

சோடனைக்காக
வெட்டிக் கழிக்கின்றாய் பூஞ்செடியை
வடிந்த கண்ணீரைத்
துடைத்துக் கொண்டே இருக்கும் எனக்கு
இந்த வார்த்தைச் சோடனை
மட்டும் பிடிக்குமா என்ன ?

நீ இரட்டைக் குழல் துப்பாக்கி

என் மூங்கில் வனமோ துளைகளில்

கல்யாணியை ஏன் வடிக்கிறது

இரு வலம்புரிகள்,
அதனுள் நசிந்த உயிர்,
இரு சிப்பிகளின் புரட்டுகை,
சற்றே ஒளிரும் இரு முத்துகள்,
மென்னிதயமும் மென்னிதழும்
அவளொரு மணற்பெண் என்பதாக

தாய் வீடென்பது தாமரைப் பொய்கையின்

நீர் பருகிக் காற்றளைந்த
நெல் வயலின் இருளற்ற குடில் என்பதாக

மழைக்கு முன்னான
மின்னலை இங்கு காணவேயில்லை
இவர்கள் கண்களில்

ஆனந்தக்கண்ணீர் இல்லைப்போல்

 

00

ரயிலில் ஏறி தவறி விழுந்த
மழைத்துளி ஒன்று சிலிர்ப்படங்கி
நைந்த மனதை வருடுவதாய்
தண்டவாளத்தில் தலை சிதறி
ஒரு வானவில்லை வளைத்துக் கிடக்கிறது

அனேகமாக நான்
எழுதித்தீர்க்கும் ரயில்
மணிகள் கணங்களாய் உருளும்
நிலை அடையாத்தேர்

இதழிக்கும் ஈரம் பூசிய பச்சை
நாவுகளினுள் திறக்கிறது
நதியின் தாய்மைச்சொல்

மழை நிழலில் குடை விரிந்த

வெற்றுச் சிப்பிக்குள்

அடர்த்திய கடல் நீ பத்திரமாய் இரு

ஒரு பூ உதிர்வதைப்போல
நீ வருவது நிச்சயம் எனில்
உனக்காக காத்துக் கிடப்பேன்

மௌனச் சொல்லால்
நான் எழுதிய அமர காவியத்திற்கு
"கொல்" என்று தலைப்பிட வா 

00

ஒவ்வொரு முகங்களுக்குள்ளும்
நதியின் நகர்வு
கடலைக் கட்டிப் போடுகிறேன்
நடுங்கிய கைகளில் உப்பின் நீர்மை

கடந்து போக முடியாது
இது நதியின் கால்த்தடம்
முடியுமாயின் நிரவி மூழ்கு

துயரங்களால் அறையப்பட்ட
சிலுவை ஆணிகளில்

வாழ்வதிர்வின் கருநிழல்
கழிம்பூறி இருந்தது

மூங்கில்வனம் நகர்கிறது
நெடுந்தூரம் துளைத்த

சுவடுகளால் எரிகிறது
பொட்டல் பூக்காடு

நிலத்தின் தவிப்படங்க
புடைத்தெழும்
உணர்வன்பின் வேர் வகிடெடுத்து

பெருவிருட்சமாய் கிளைக்கிறது,
விளிம்பு கட்டி மழையென வா
அன்றேல் தீ மூட்டு
கடல் சிதையேறட்டும்

00

அம்பு துளைத்து
உடைந்த பாறையின்
வலிந்த மனக்குவிகத்தில்
சொல் அணிந்த படிமங்களை நிரப்புவதில்லை
இரண்டாவது சாவுக்கு கவிதை மார்பு

அனிச்சம் பூவாயினும்
காம்பினின்று கழன்று வீழ்தல் தானே நிஜம்

சிதைத்த கற்களில் சிலை செய்கிறேன்
இதோ இறுதியில்
உங்கள் கண்களை பொருத்திப் பாருங்கள்

சலனப்பட்டாலும்
காற்று காற்றுத்தானே
கொந்தளித்தாலும்
கடல் கடல்தானே காற்றே கடலா நீ

உன் கடலில் மூழ்கிய மனதின் மொழியை
சிப்பி வாயிலகப்பட்ட
மழைத்துளி என்கிறேன் ஏன்

உயிர்ச் சொற்களின் குவியலில்
கவியும் இரவுகள் ஒருபோதும்
சருகாகுவதில்லை

கடித்துத்துப்பிய நகத்துண்டில்
நிலவைக் காணும் என்னுள்ளும்
நிரவி இருக்கிறது ஓர் அக்னி

தெரு விளக்கின் வெளிச்சத்தில்
படித்துக் கொண்டு இருக்கிறேன்
கண்ணாடி யன்னலோரம் இருந்து .
ஒற்றை அறையின் குமிழ் விளக்கு
இருளடைந்து கிடக்கிறது
என் திருடப்பட்ட பகல் போல

 

00

சலசலத்து ஓடிக் கொண்டிருக்கும்

மனவெள்ள ஆற்றில்
நினைவுச் சருகுகளின்
உச்சி முகரும் ஓசை

இறகுகளைப்பிய்த்து
கூடு கட்டிய இருவாச்சியின்
உடலெங்கும் தழும்பேறி கிடக்கிறது அன்பு

கடன் கேட்டேன்
அவர்கள் தரமறுத்து விட்டார்கள்
பணத்தை அல்ல மனதை.

கொடுக்கத் தெரியாதவர்கள்
எடுக்கத் தெரியாதவனுடன்
எப்போதும் கூடி வாழ்வது தானே வழமை

நான் இறந்து விட்டதாக தெரிவித்தார்கள்
காகிதக் கடலால் நிரப்பப் பட்ட கப்பல்
என் உயிர் என்று தெரியாதவர்கள்

பூவொன்றின் கதறலும்
கசிந்த ரத்தக் கறையும்
பூமரத்தைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்

வேப்பம்பூக்களை மென்று விடுகிறேன்
அதற்காக தானே
பூவும் காற்றும் சினேகித்தன

 

00

என் சிறைக்குள்
சொற்களின் சிறகுகளை மட்டும்

வெட்டவில்லை யாரும்
பறக்க முடியாதா என்ன

எல்லா இடத்திலும் மழை விழுவதில்லை
நிலவுதிர்வது போல
சுடர் எரிப்பது போல

உதடசைக்க பிரயாசைப்படுவது போல்
செயல்பட பிரயத்தனம் வேண்டும்

ஒரு பார்வைக்கும்
புன்னகைக்கும் இடையில்
எத்தனை சரித்திரத் துளைகள்

உதிர்ந்த சிறகுகள் இறந்த நொடிகள்
பிசுபிசுத்துக் கிடக்கும் வாழ்வின் நெடிகள்.

நெல்லாயினும்
உலையிடும் அரிசியில் இருந்தால்
நீக்குவது தானே உங்கள் வழமை

விதைகளுக்கும்
முளைகட்டிய விதைகளுக்கும்
நிறைய வித்தியாசம் உண்டென்பதை
நீர் நன்கறியும்

உலுக்கிய போது கவிழ்ந்து வீழ்ந்தாலும்
பவளமல்லிகை
மணம் வீச மறுப்பதில்லை அல்லவா

என்னுள் என்னைப்

பொதிகட்டி வைத்திருக்கிறேன்

எப்போதாவது வந்து எடுத்துச்செல்

 

00 

நீர்க்குமிழிக்குள்
சிரித்துக் கொண்டே இருக்கும்
நீல அல்லிக்கு இரவேது பகலேது

அறைந்து நிமிர்த்திய
ஆணிகளில் தழும்பேறிக் கிடக்கிறது
கௌதம புத்தனின் கண்கள்

நிற்பதைவிட நடக்கும் போதுள்ள
ஆரஞ்சுப் பிறை செழித்த

இரவொன்றின் கால்த்தடம்
பழுத்த இலை போல
நழுவித்தப்பி பறக்கிறது

பூக்காம்பிலிருந்து
நதி பெருகுவதை உணரும்
ஈரம் இருக்கிறதா
மணல் படிந்த ஆற்றுமனசிற்கு

வீட்டின் சுவரை திறந்து பார்
விரிந்த வெற்றுச் சிப்பிக்குள்
வெதுவெதுப்பான
என் உள்ளங்கை ரேகைப்படிவு

தண்ணீருக்கு
இப்பக்கமும் அப்பக்கமும் ஏது
கொட்டியதும் இத்தனை சிறகு விரிக்கிறது

ஒரு செவ்விளநீர்
தென்னங்கனியைப் போல
ஒரு தேன்சிட்டின் முட்டையைப் போல
எனக்கு கவிதை மனமும்
கனதியான மௌனமும்.
தட்டிப் பறித்து சிதைத்து விடாதே
கொஞ்சம் விடு
உயிர்த்துக் கொள்கிறேன் 

00

மனம் விரியும் பொழுதெல்லாம்

கவிழ்ந்த குவளை நீர் போல
உருகிச் சிந்தின சொற்கள்

அனிச்சம் பூவின் இதழ்களை
பன்னிரண்டு ஆண்டு காலநொடிகள்
காத்திருந்து திறக்கின்றன
ஒரே நாளில் வாடியுதிர்க்க

ஆழ்மனதில் பீறிட்டெழுந்து
அன்பொழுகிய வார்த்தைகள்
குரல்வளை வழி வருகையில்
கொஞ்சம் நெரிந்திருந்தன

பூக்கள் கொய்தவனுக்காக
பழி தீர்ப்பதில்லை
மறுபடியும் மொட்டுடைத்து

குலுங்கி விரிகின்றன

நான் விடிவிளக்கின்
திரி முடுக்கியாயினும்
அணைத்துப் பற்றிக் கொள்ள

தீயாய் நீ வேண்டுமல்லவா

 

00 

பூவரசு இலையொன்றில்
பொரிவிளாங்காய் செய்திருந்தேன்
சிற்றலை தொடுத்து
என் வாசல் மண்ணில்

வலித்தாலும் விடம்பாய்ச்சாத
நாயொன்று தெருக்கோடியில்
நேயத்தின் கிளைபிரித்து
சுருண்டு கிடக்கிறது

பருத்திச்சுளை ஒன்று
வெண்பட்டாம்பூச்சியாய்
கொழுந்துக் காயத்தோடு பறந்து போகிறது

கிளைக்குக் கிளை காய்த்துக் தொங்கும்

என்னுயிர்க்குருத்தில்
அடியிருந்து நுனிவரை
ஊதாநிறத்து செர்ரிப்பூக்களின்

கனியும் வாசம் உன்னாலா

00

அமைதியை கிழித்து

முளைத்தது இந்த உலகம்
பெருகிய குருதிக்கடலில்
மூழ்கிக் கப்பல்கள் பாய்ந்தன
உலகின் கண்கள்
எரிமலையாய் கடல் கொண்டன
இதயங்கள் கண்ணிவெடிகளைப் புதைத்தன
காதுகள் ஆக்கிரமிப்பாளனைச் சங்கூதின
பணம் மனிதத்திற்கு சவக்குழி தோண்டியது
தண்ணீர்த் தாகமெடுத்து
தேசம் கடலைப்பருகின
அவர்கள் மறந்து விடும் படியாக
நரம்பறுத்து விடுதலை நாண்
பற்றற தொங்கியிருந்தது
பணியாத குருதியின் நிறத்தை மாற்ற
அவர்களால் முடியவில்லை
அவர்கள் சுவடிடும் படியாக
எங்கள் தாய்க்குருதி
நிழல் மட்டும் இருந்தது
அவர்கள் முள்வேலியால்
எங்கள் வெள்ளரிப்பிஞ்சுகள் கிளிபட்டன
அவர்கள் தலையணையை
எங்கள் குழந்தைகளின் குடல்கள் நிறைத்தன
அவர்கள் இச்சைக்கு
எங்கள் பூக்கேணிகள் அழுகிச் செத்தன
அவர்கள் குழந்தைகளின்
விளையாட்டுப் பொம்மைகளுக்கு
முடுக்கியாகவும் சொடுக்கியாகவும்

எங்கள் பிறப்புச் சான்றிதழ் பொருத்தப்பட்டன

ஏனெனில்
நாங்கள் விடியலின் கிழக்கற்றவர்களா

00

வெண் தூவல் போர்த்திய
பாதைகள் மெது மெதுவாக
தம்மை அவிழ்க்கின்றன
புதையப் புதைய
மேனி படர்ந்து புற்கள்
கண்ணீர் சிந்துகின்றன

உயிர் அள்ளிக் குடிக்க
மோனத்தவமியற்றும் கடற்சங்கின்

காதுகளில் ரசவாதம் பறவைகளின் சுவடு

வட்டக் குடுவையில்
சேமித்த பெருமூச்சுக்களை
பொட்டலம் கட்டி

தன்னை அலைக்கழிக்கின்றான்
கடல்களை கால்களில்
இடம்பெயர்த்த வான்கா

சிறகு பொருத்தி
ஆதிச்சுவையை குரலெழுப்பி
மீட்டு இருவாச்சியாய் பறக்க வைக்கிறாய்
விலகாமல் துடிக்கும்
உள்ளிருந்து மீட்டும் நீ மகரந்தயாழ்

மனசெங்கும் விறைத்துக் கிடக்கிறது
நடுங்கும் விரல்களில் சொல் புகுத்துகிறாய்
பொட்டல் பூக்காடு மறுபடியும்

உன்னால் மொட்டுக் கட்டாதா என்ன

00

கவித்துவமான இரண்டு பிறைத்துண்டங்களை
கட்குழிக்கு மேலே நட்டு வைக்கிறேன்
முளைத்த கணத்திலேயே
கிளைத்து பெருகியது ஒரு பெரு விருட்சம்

அறியவில்லையா
அது ஒரு விஞ்ஞானம் என்கிறாய் நீ
மூளையில்லாத இதயத்திற்கும்
இதயமில்லாத மூளைக்கும்
இடையே முழு இருட்டு
நிழலைத் துரத்தும் நீலக்குயிலின்
சாகசம் அறிகிறேன்

ஜன்னலில் வந்தமர்ந்த பட்டாம்பூச்சியாய்

உன் கூதலுறும் சிறகுகள் நடுங்கிச் சிலிர்த்தன
கழற்றிய துயர்களை
எடுத்து மாட்டிக் கொண்டு
மெல்ல விலகிப் போகிறாய்

கொட்டும் காலத்தின்
பூச்சிக் கொடுக்குகளின்பூஜ்ஜிய ரணங்கள்
தொலையத் தொலைய
ஈரக்கணமொன்று மஞ்சள் பூவாய் கரைகிறது

பூமி சிலிர்த்துக் கொள்ளும்
ஓர் அரைக் கணத்தில்
மீண்டும் மீண்டும் முளைத்த படியே இருக்கிறது
ஓராயிரம் கனவுகளும் ஒரு விளை காதலும் 

- தமிழ் உதயா

Pin It