கொய்து போடடா ஜாதிய நோயை - கொலைக்களம்
கொள்ளுமோ தமிழனின் வாழ்வை?

ஆரியம் வாழவா அடித்து மாள்கிறாய்?
தமிழா….. நீயா மானுடம் மறுக்கிறாய்?

முல்லைக்கும் மயிலுக்கும் பாசம் காட்டினான் -முன்னோர்
சொன்னதை செய்ததை தூக்கிலே ஏற்றினாய்

பாதியில் வந்ததை பகுத்துப்பாரடா - வேதசாஸ்திரம்
நமக்கில்லை இழிவென்று சொல்லடா!

சாதியம் பேசியே சாவதும் ஏனடா? - சமத்துவம்
இல்லையேல் கொடும்சிங்களன் மேலடா!

சிந்திக்க மறுப்பதேன் என்னுயிர் தோழனே
சிந்திய ரத்தத்தால் சாதிகள் வாழ்வதேன்?

ஈனமாய் போனதே என்தமிழ்தேசமே !
இனத்தினும் பெரியதோ சாதிய பாசமே ? ....

இனமானம் வீழ்வதேன் இழிந்து போனதேன்
களமாடிய வீரமெல்லாம் கரைபட்டு போவதேன்

காணாத பொருளெல்லாம் கடவுளாய் பார்க்கிறாய்
கண்ணில் தீட்டென்றாய் சாணிப்பால் கொடுக்கிறாய்

சாதியும் இல்லையே வேதமும் இல்லையே
சாதிக்க பிறந்தவன் வீழ்வதும் இல்லையே

களைந்து எறியடா சாதியம் தொல்லையே
முளைத்து வரட்டும் சமதர்ம மண்ணிலே

இடுகாட்டு இடம் கூட பொதுவல்ல
பிணம்தின்னும் சாதியே இதுசரியல்ல

உன்னில் விதையடா உயரிய விதையை
களையெடுத்தெறியடா சாதிய தீயை

- பெ.பாண்டியன்

Pin It