என்றாவது ஒரு இரவு
நீடித்துவிடுகிறது
அந்த ஒருவரின் வருகைக்காக
பேருந்தின் கழிவிரக்கமற்ற
திடீர் நிறுத்தத்தோடு.
பின்னிரவை நெருங்கும் பசியைப் பற்றியெல்லாம்
சிவப்பொளி தடைகாட்டிகளைக்
கொண்டு வாகனங்களை
மாற்றுப் பாதைக்குத் திருப்பிவிடும்
காவலாளிகளுக்குக் கவலையில்லை
மதியம் சாப்பிட்ட உணவின்
கடைசிப் பருக்கை
சீரணிக்கும் சத்தமும் குளத்துத் தவளையெனக் கரைதாவ முயலும்படி
தத்த
ஒரு அலைவட்டம்
வயிற்றுக்குள் விரிந்து சமநிலையடைகிறது
திரும்பிச் செல்லும் வாகனங்களில்
ஒன்றிலாவது
தெரிந்தவர் முகம் தெரிகிறதாவென
தலை திருகிப் பார்க்க
யாரோ ஒருவர் மட்டும்
வேண்டாதவராகத் தெரிந்துவிடுகிறார்
பேருந்து நின்றதிலிருந்தே
முன்னிருக்கைக்குக் கீழே
நாற்றமெடுக்கத் துவங்கிவிட்டது
வெகுநாளாக துவைக்காத
காலணி உறைகளின்
ஒரு சோடி நாற்றம்.
பசிக்கும் நாற்றத்திற்குமிடையே
பொறுமையிழந்தவர்களில்
சிலர்
சிற்றுண்டிக் கடைகளைத் தேடிச் செல்ல
எனக்கு அருகிலிருப்பவர்
எனக்கும் சேர்த்து
ரொட்டியொன்றை வாங்கிவந்திருந்தார்
இடப்புறம் திரும்பினால் வலப்புறம்
வலப்புறம் திரும்பினால் இடப்புறமென
நாறிய காலுறை நாற்றத்தினை
சகியாத பசி
ரொட்டியைப் பிட்டுப் பிட்டு
விழுங்க,
"இப்பதான் பேசிமுடிச்சாராம்
இன்னும் அரை மணி நேரத்துல
பஸ்ஸ எடுத்துருவாங்க "
என்ற ஆசுவாசங்களும்
இனிப்பாகத்தானிருக்கின்றன!

- புலமி

Pin It