மாயவனின் தேசத்தில்
சுத்தத்தை பாதுகாக்க கோடிகளில் செலவு செய்வோம்
தெருக்கோடிகளில் கதறும் ஏழைகளை ஏளனம் செய்வோம்...
புதிது புதிதாய் கார்டுகளை வாங்கச் சொல்வோம்
ஒவ்வொன்றையும் இணைக்கச் சொல்வோம்
போராட்டம் நடத்தினால் சிறையில் அடைப்போம்...
புதிய சாமியார்களின் விழாக்களில் கலந்துகொள்வோம்
கலங்கும் விவசாயி குரலை
அவன் சாகும் வரை கேட்க மாட்டோம்...
திடீரென்று ஒரு நாள் சாமி வந்தது போல்
ஏதும் செல்லாது என அறிவித்துவிடுவோம்
செல்லாக்காசாய் போனோர்கள் பற்றி
எதற்காக‌ நாங்கள் கவலைப் படுவோம்?
மானியங்கள் ஒவ்வொன்றாய் லிஸ்ட் போட்டு ரத்துசெய்வோம்
நீ மனிதன் தானா எனப் பரிசோதிக்க‌
ஒரிஜினல் சான்றிதழ்களை எப்போதும் எடுத்தே பயணிக்கச் சொல்வோம்...
மக்களின் காசை வைத்து
பல நாடும் சுற்றி வருவோம்
தனக்கான சம்பளம் கேட்டால்
தகராறு தொடர்ந்து செய்வோம்..
நீ மருத்துவராக வேண்டுமென்றால்
மேலும் ஒரு தேர்வு என்போம்
கல்வி இன்னும் தேசமெங்கும்
சரிக்குச் சரி கிடைக்கவில்லை என்பதை மறந்து போவோம்..
பட்டணங்களை சீக்கிரம் சென்றடைய‌
புல்லட் ரயிலை இறக்கி விடுவோம்
பரலோகம் செல்லும் நாட்டு மக்கள் பற்றி
டிவீட்டரில் மட்டும் பதிவு செய்வோம்..
எதிர்த்து குரல் கொடுப்போரை இல்லாமலும் ஆக்கிடுவோம்
சேர்ந்து பயணிப்போரை பதவி கொடுத்தும் அழகு பார்ப்போம்..
மாயவனின் தேசத்தில்
எல்லாம் டிஜிட்டல் மயம்
விரைவில் சோறும்....

- அ.வேளாங்கண்ணி

Pin It