'மற்றவை நேரில்..'
என்றபடி செல்போன் அணைந்துவிட்டது.
சொற்கள் மீண்டும் சந்திப்பை
ஏற்படுத்தக் காத்திருக்கும் நிமிடங்களை
எங்கே பத்திரப்படுத்துவது?

சட்டைப்பைக்குள் வைத்தால்..
தவறுதலாக
அழுக்கென கருதி துவைக்கப்பட்டுவிடும்.

புத்தகத்துக்குள்
செருகி வைத்தால்..
மறந்து போய் பழுப்பேறிவிடும்.

கைக்குட்டை முனையில்
முடிச்சிட்டுக் கொள்ளலாம்..
ஆனால்..
கைக்குட்டை பயன்படுத்தும்
பழக்கமற்றவன் நான்.

அலமாரியின் கடைசித் தட்டு முழுக்க..
பழைய செய்தித் தாள்கள்
பிதுங்கிக் கிடக்கின்றன..
அவைகளுக்கிடையே ஒளித்துவைக்க
முடிவு செய்தேன்..

அவையும் கூட..
அடுத்த வெள்ளிக்கிழமை..
எடைக்குப் போய்விடும்..

அந்த சொற்கள்..
மீண்டும் சந்திப்பை

ஏற்படுத்தக் காத்திருக்கும்
நிமிடங்களை
எங்கே பத்திரப்படுத்துவது?

 - இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It