city road night

அலுவலகம் துறக்கும் நாம்
இந்நகர வாகனங்களின்
சிவப்பு விளக்குகளும் கண்களும்
ஒன்றுக்கொன்று மாறிமாறித் தின்ற
முகத்துடன் வீட்டுக்கு வருகிறோம்

உன்னை நீயும் என்னை நானும்
நாம் வீடு சேரும் முன் உறுதி செய்கிறோம்

நாளின் தோய்ந்த சாயல்களை
காலணிகளில் பாதியையும்
உடைகளில் மீதியையும் விட
இன்னுங்கொஞ்சம் மிச்சமிருக்கிறது

இந்நகர இரவிலிருந்து
நம்மிரவைத் தரும் பாடலொன்றுக்கு
சேனலை மாற்ற நம் சாயலுறுகிறது இரவு

கடந்து வந்து இந்த நாளைக் கொஞ்சம்
கைகளில் வைத்து பேசிக் கழிக்கிறோம்

அன்றைக்குள்ளான செய்தியையும்
அதனுள்ளான வதந்தியையும்
மீள்தலாக மீம்ஸ்களாக நகர்த்துகிறோம்

இடரும் அதன்நேர் இன்பமுமாயிருந்த
பொழுதிலிருந்து எடுத்த மலர்களோடு
நம் வீடுகளுக்கு அலைபேசி
அவர்களை நெருங்கி வாழ்கிறோம்.

அவர்கள் கோர்க்கும் நகர பயங்களுக்கு
தேடினால் கிடைக்கும் நகர நம்பிக்கையினால்
ஒளியூட்டிப் படரச் செய்கிறோம்

பின் கண்ணைக் கட்டும் நம்மிரவு
என்றொவொருநாள் நம்மையுரசி மூண்டு நிற்க
அது கேட்கும் சிலதுளிக்கு ஒரு துளியாகிறோம்.

இதோ இன்றிரவும் அணைக்க முயல
எத்தனையோ பகல் வெளிபடுத்தத் துடிக்க
இரண்டுக்கும் மீறி
பெருகி நிற்கும் இந்நகரத்தில்
கனவுகளுடையாது மிதந்து கடக்கும்
நீயும் நானும் உடையாத ஓர் குமிழி.

- முருகன்.சுந்தரபாண்டியன்

Pin It