அவளுக்கும் அவனுக்குமிடையில் 
உருவாகியிருக்கும் ஒரு சுவர் 
நீங்கள் தொட்டுப் பார்க்க நினைப்பது போல் 
கல்லாலும் மண்ணாலும் 
உறுதியாகவே இருப்பது 
அதன் தரமென்பது மூன்றாம் நபர் தொட 
அசையாதிருப்பது 
பறவைகளின் எச்சங்களை இழிந்து கொள்வது 
எங்காவது என்றாவது 
எதாவதொரு கொடியைப் படர 
அனுமதிக்கும் போதில் 
அதில் சில பூக்கள் மலரலாம் 
இல்லையெனில் வரம்பு மீறலில் 
வேரோடு பிடுங்கி வீசியெறியப்படலாம் 
அந்தச் சுவற்றில் உட்கார்ந்து 
பாடல் கேட்பவர்களுமுண்டு 
கேட்கும் சாக்கில் காலாட்டியபடியும் 
இருக்கிறது அந்தப் பாடல் 
வண்ணங்களின் பிரகாசம் மங்கி 
அழுக்குகளேறிக் கொள்ளும் வயோதிகமும் 
வரக் கூடியதுதான்... 
மதில் மேல் பூனையும்
தோன்றித் தோன்றி மறைவதுண்டு
ஆயினும் விரிசலைக் கண்டு 
வலுவிழந்துவிடக் கூடுமெனில் 
அதன் இரு பக்கங்களும் 
ஒன்றுக்கொன்று எதிரெதிரத் திசைகளில் 
சந்திக்கவேண்டியதிருக்கும்....!

- புலமி

Pin It