காதல் இப்படி தான்
என் பார்வைகளோடு
உன் காட்சிகளையும்
கலந்தே செய்திருக்கிறது....!

'ம்' என்ற ஒற்றை 
எழுத்தின் மாயம்
நேசத்தின் தூரிகையாய் 
உருமாறி,
இன்னுமொரு வானத்தையும்
இன்னுமொரு பூமியையும்
சேர்த்தே வரைந்திருக்கிறது....!

சொல்வதாய் இருந்த கடைசியும்
முதலுமான சொற்கள்
மெல்ல மெல்ல அமிழ்கிறது
நேசத்தின் கண(ன)ங்களுக்குள்ளும்,
கானங்களுக்குள்ளும்....!

தனிமையின் இசை நிறைகளில்
உனதான நினைவுகளும்
எனதான உன் நிறைவுகளும்
கைகள் கோர்த்து நெகிழ்வாய்.....!

ஊடல் முடியும் வரை முன்னிறுத்தப்படுவது
உன் செவ்விதழ் தான்
முடிந்தால் தந்துவிட்டு போ
பல யுத்தங்களையும்,
சில முத்தங்களையும்......!

- ஆனந்தி ராமகிருஷ்ணன், சிதம்பரம்

Pin It