தினமும் தண்ணீர் ஊற்றுகிறார்கள்
ஆனால் வளர்வதில்லை செடி
வாடுவதில்லை பூக்கள்
கதவை திறந்தே வைக்கிறார்கள்
வாசமுமில்லை
வண்ணத்துப் பூச்சியும் வருவதில்லை
தேவையிருந்தாலும்
பூக்களைப் பறிப்பதுமில்லை
இலை சருகாவதுமில்லை
எழிலிருந்தாலும்
தென்றலில்லை
இவை குறித்தெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை
எங்கள் வீட்டு குளியலறையின்
வெளிநாட்டிலிருந்து கப்பலில் இறக்குமதியான
நவீன சலவைக் கற்களில்
இயற்கையின் வண்ண ஓவியங்கள் அவைகள்...

***

பறவையின் சிறகிலிருந்து தூசுகளின்
இயலாமைகள் உதிர்வதைப் போல
அன்புடையோர் முத்தமிடும் கணங்களில்
கனமான வலியுணர்கள் உதிர்கின்றன
வானத்தில் பறக்கும் உணர்வை விட
முத்தத்தைப் பெற்றுக் கொடுப்பது தித்திப்பானது...

****

தெருக் குழந்தைகள் ஓளிந்து பிடித்து விளையாடும்
விளையாட்டை எப்போதும் தேடி கொண்டேயிருக்கிறார்கள்
பங்களா கேட்டின் இடுக்கிலிருந்து
விலையுயர்ந்த ஜிம்மியும்
விதி மீற முடியாத சிறுவனும்...

****
ஒவ்வொரு ஆணிக்கு அடியிலும் மரத் தக்கைகள்
ஒவ்வொரு மரத் தக்கைகளுக்குள்ளும் ஒரு வனம்
ஒவ்வொரு வனத்திற்குள்ளும் எண்ணற்ற பறவைகள்
அழைப்பு மணி கருவியில் பறவைகள்
கத்தும் சத்தத்தைக் கேட்பவர்களுக்கு
அப்பறவைகளின் ஆன்மா பாடும்
சோக கீதம் ஒலிக்காது...

- சீதா, சென்னை

Pin It