காட்டிடை ஊஞ்சலொன்றிலமர்ந்து
கண்கள் மூடிக் குழலூதிக்கொண்டிருந்த
அவளின் ஊஞ்சலை அவளறியாவண்ணம்
பின்னாலிருந்து மெதுவாக
அவன் அசைத்து விட ..
திடுக்கிட்ட அவள் சட்டென்று விலகி நின்று
மருண்ட விழிகளோடவனை நோக்கினாள்..
அவர்களினருகே சலசலத்துக் கொண்டிருந்த
மஞ்சள் நீராற்றின் நடுவே
சிறு மீனொன்று தாவிக்குதித்தோட...
ஊஞ்சலின் மேலிருந்த அவளின் குழலை
இவன் கைக்கொண்டு ஓரப் பார்வையில்
அவளை நோக்கியபடியே
குழலூதத் தொடங்கினான்..
இதைக் கண்டு சினம் கொண்டு
சிவந்து நின்ற அவளின் மேல்
மரக்கிளையொன்றிலிருந்து
சுகந்தங்களை நுகர்ந்து கடந்து சென்ற
அணிலொன்று தாவிக் குதித்துப் போக
சட்டென்று மிரண்ட அவளைப் பார்த்துப்
புன்னகைத்த அவன் ,
அவளின் மலர்க் கிரீடத்திலிருந்து
தவறி விழுந்திருந்த மலரொன்றை
அவள் எடுத்துக் கொள்ளும் முன்
தான் எடுத்துத் தன்னகத்தே
பத்திரப்படுத்திக் கொண்டு
அங்கிருந்து மெல்ல நகர்ந்தான்...
அந்த அரங்கத்தினுள் அடுத்ததாயிருந்த
ஓவியச் சட்டத்துக்குள்
தன் பாதங்களடியில் நட்சத்திரங்களை
ரசித்துக் கொண்டிருந்த குழந்தையைக் கண்ணுற...

- கிருத்திகா தாஸ்

Pin It