lovers kiss 370பீரோவுக்குள்
எப்போதுமே அறை மாறியே
இருக்கின்றன நம் துணிகள்...

இன்றும் வாசலில்
ஜோடியாகத்தான் கிடக்கின்றன
நம் காலணிகள்...

வேண்டுமென்றே கடைசி
இரண்டு மிடறோடுதான்
தேநீர்க் குவளையை உன்னிடம்
நீட்டுகிறேன்...

அலைபேசியில் நம்
பெயர்கள்
உனது எனதும் எனது உனதும்....

சட்டென சமையலறை
வந்து போகும் என் வாய்க்குள்
அதுவரை நீ கடித்துக் கொண்டிருந்த
ஏதோ ஒரு காய்...

புன்னகைத்து திரும்பிக் கொள்ளும்
உன் வெட்கத்தில்
மெல்ல அரும்புகிறது
மாலை நேரத்து மயக்கம்...

நெற்றியில் நெற்றி வைத்து
பொட்டிடும் நொடியில்
குட்டி நிலாக்கள்
பிறக்கின்றன... ..

இத்தனை வருடங்களுக்குப்
பிறகும் விடிகையில்
இடம் மாறித்தான்
எழுகின்றோம்....

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.