தூசி படிந்திருக்கும் புத்தகங்கள்
சிந்தையைத் திறக்கும் சாவிகளாய்...

தேடல் கயிறுகளில் பயணப்படும்
கனவுகள் பட்டங்களாய்...

சொந்தபந்தங்களின் எதிர்பார்ப்புகள்
விண்ணை முட்டிய மேகங்களாய்...

குடும்பத்தினரின் முணுமுணுப்புப்புகள்
செவிகளில் குறுகுறுக்கும் அனல்களாய்...

துணையின் ஒத்த ரசனை பலமோ, பலவீனமோ
அதைத் தாண்டிய ஏக்கப் பெருமூச்சுகளாய்...

சமையலறையின் பாத்திரங்கள்
அணிவகுப்பின் ஒப்பாரிகளாய்...

அலுவலக கோப்புகள்
மலை போல் குவிந்து
நகர்தலுக்கான ஒப்புதலுக்காய்...

புறணி பேசும் அக்கம்பக்கத்தினரின்
இணை சேராத அதிருப்திகளாய்...

மனமெங்கும் நிரம்பிக் கிடக்கிறது,
அனுதின வாழ்வியலுக்கான தேவைகள்,
சுவரில் பட்ட பந்துகளாய்
உருமாறுகிறது...

கிணற்றுத் தவளையாக இருந்துபின்
கடல் மீனாக மாறி
பிறகு கிணற்றிலே திசை மாறி வருவெதென்பது,
வீணையில் ஆயிரம் கோடி
தேடல் நரம்புகளை
ஒன்றன்பின் ஒன்றாகப் பிய்த்தெறிவதைப் போன்றது...

படைப்பாளிகளுக்கே உரித்தான
சாபம் பெற்ற தவ வாழ்க்கை...

ஆண் படைப்பாளிகளுக்கான சாளரங்கள்
பெரும்பாலான பெண் படைப்பாளிகளுக்கு எட்டாக்கனி...

விருப்ப நகர்வுக்கான உரிமை பறிக்கப்படுவதைக் காட்டிலும்
உயிர் வாழ்வதென்பது சவத்தின் மேல் பயணமே...

- சீதா

Pin It