யாதும் ஊரே வினைஞரே கேளிர்

தீதும் நன்றும் பிறர்செயல் விளைவே

தன்வாழ்வு வாழவும் தன்னினம் தொடரவும்

போதிய அளவே பொருட்களை ஈட்டிய

பண்டைப் பொதுமைச் சமூகத்தில் இல்லை

பிறர்துயர் நீக்க மறுக்கும் தன்மையோர்

எஞ்சும் அளவு ஈட்டும் திறனில்

மிஞ்சும் பகைவர் நமக்குள் உதித்தனர்

அடிமைச் சமூகமும் பண்ணைச் சமூகமும்

முடிவுற வேண்டிய முதலாளித் துவமும்

மனித இனத்தில் வர்க்கத்தைப் புகுத்தின

வர்க்க ஒற்றுமை உயிரெனப் போற்றிடச்

சர்க்கரை மொழியில் மாயவலை விரித்தன

மக்களின் தேவையை உற்பத்தி செய்வதில்

மிக்க லாபம் கிடையா தென்பதால்

மருந்திலும் உணவிலும் முதலிட மறுக்கும்

பெருமுத லாளி கேளிர் என்பது

கேலிக் கூத்து மயக்குமொழிப் பேச்சு

காலிக் குடத்தின் குறைவிலா ஓசை

எங்கள் நலனைக் கெடுக்கும் முறையைக்

குரங்காய்ப் பிடிக்கும் முதலாளிக் கூட்டம்

எங்கள் கேளிர் என்பதை ஒப்போம்

உற்பத்தி முறையில் லாபம் நோக்காது

பற்பல மக்களின் தேவையின் பொருட்டு

இயற்கை வளங்களைச் செலவிடும் முறையை

தயங்கா தேற்கும் வினைஞரே கேளிர்

யாவரும் கேளிர் என்பது மாயையே

தீதும் நன்றும் பிறர்செயல் விளைவே.

(எல்லா ஊர்களும் நம்முடைய ஊர்களே. உழைக்கும் மக்களே நமது நண்பர்கள் ஆவர். நன்மையும் தீமையும் பிறருடைய செயல்களின் விளைவுகள் தான். (மனிதன்) தன் வாழ்வு வாழவும் தன்னுடைய இனம் தொடரவும் தேவைப்படும் அளவிற்கு மட்டுமே பொருட்களை உற்பத்தி செய்ய முடிந்து கொண்டு இருந்த, புராதன பொதுவுடைமைச் சமூகத்தில் (அனைவரும் கூட்டாக வழ்ந்ததால்) பிறர் துயரை நீக்க மறுக்கும் தன்மையோர் இல்லை. கூடுதலான அளவு உற்த்தி செய்ய முடிந்த போது (சிலர் உழைக்காமல் இருக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகி, உழைக்க விரும்பாத) எதிரிகள் மனித இனத்தில் தோன்றினர். (அப்படி உழைக்க விரும்பாத சோம்பேறிகள், சுரண்டும் வர்க்கமாக மாறியதால் அமைந்த) அடிமைச் சமூகமும், நிலப் பிரபுத்துவச் சமூகமும், முடிவுக்கு வர வேண்டிய முதலாளித்துவச் சமூகமும் மனித இனத்தில் வர்க்கத்தைப் புகுத்தின. வர்க்கங்களிடையே ஒற்றுமை வேண்டும் என்று இனிமையான மொழிகளில் மாயவலை விரித்தன. மக்களின் (அவசியத்) தேவைகளான மருந்தையும் உணவையும் உற்பத்தி செய்வதில் அதிகமான இலாபம் கிடைக்காது என்பதால் அவற்றை உற்பத்தி செய்வதில் மூலதனத்தை ஈடுபடுத்த மறுக்கும் பெருமுதலாளிகளை நமது நண்பர்கள் என்று கூறுவது காலிக் குடத்தின் குறைவில்லாத ஓசையைப் போன்ற கேலிக் கூத்தும் மயக்கு மொழிப் பேச்சும் ஆகும். (அவசியமான பொருட்களை உற்பத்தி செய்ய மறுத்து) எங்கள் நலனைக் கெடுக்கும் (சந்தை) முறையைக் குரங்கு போல (விடாது) பிடித்துக் கொள்ளும் முதலாளிகளை எங்கள் நண்பர்கள் என்று ஒப்புக் கொள்ள மாட்டோம். உற்பத்தி முறையில் இலாபத்தை நோக்காது அனைத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் (சோஷலிச) முறையைத் தயங்காது ஏற்கும் உழைக்கும் மக்கள் தான் நமது நண்பர்கள். அனைவரும் நண்பர்கள் என்பது ஒரு மாயையே. நன்மையும் தீமையும் பிறருடைய செயல்களின் விளைவுகளே.)

- இராமியா

Pin It