இளவரசன், செந்தில், கோகுல்ராஜ் இந்தச் சமூகத்திற்குச் சொல்லும் செய்தி என்ன? காதல் வேண்டாம். அப்படியே காதலித்தாலும் சாதி விட்டுச் சாதிதாண்டும் காதல் அறவே வேண்டாம். காதலித்துத்தான் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தால் அவரவர் சாதிக்குள்ளேயே காதலியுங்கள். இதுதான் இவர்கள் சொல்லுகின்ற வாழ்க்கைப் பாடமாக இன்று பலரால் சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் இளவரசன் மற்றும் கோகுல்ராஜை படுகொலை செய்யவும், செந்திலை முடமாக்கவும் செய்த சாதிவெறியை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? காதலிப்பது குற்றம், அதுவும் பிறசாதிப் பெண்களைக் காதலிப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்று கொக்கரிக்கும் சாதி அமைப்புகள் காதலுக்கு எதிராக முன்வைக்கும் முழக்கங்கள்:

Ilavarasan body• காதல் சமூக அமைதியைக் கெடுக்கிறது: குடும்ப கௌரவத்தைக் குலைக்கிறது.

• நாடகக்காதல் செய்து, மேல்சாதிப் பெண்களைக் குறிவைத்துக் காதலித்து அவர்களை ஏமாற்றுகின்றனர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்.

• தாழ்த்தப்பட்டோர் ஏழைகள். அவர்கள் பிறசாதியில் உள்ள பணக்காரப் பெண்களைக் காதலித்து அவர்களது சொத்தை அபகரிக்க முயல்கின்றனர்.

இந்தியச் சமூகத்தையும் அதன் சாதிக் கட்டமைப்புக்களையும் புரிந்துகொண்ட எவருக்கும் தெரியும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் எள்ளளவும் உண்மையில்லையென்று. ஏனெனில், நூறுக்கு 99 விழுக்காட்டிற்குமேலான திருமணங்கள் சாதிக்குள்ளேயேதான் நடைபெறுகின்றன. ஒரே சாதிக்குள்ளே நடைபெறும் அத்தகைய திருமணங்களில்

• ஆணும் பெண்ணும் விவாகரத்துக் கேட்டு நீதிமன்றம் செல்வதில்லையா?

• வரதட்சணை எனும் அரக்கனால் பெண்கள் படுகொலை செய்யப்படுவதில்லையா?

• கள்ளக்காதல் காரணங்களால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் கொலைசெய்யும் நிகழ்வுகளை நாம் தினம்தோறும் ஊடகங்களில் பார்ப்பதில்லையா?

• கட்டிய மனைவியைக் கணவனே மற்றவர்களுக்குத் தாரைவார்ப்பதில்லையா?

• முறைப்பெண்களோடு உரிமையுடன் உறவுகொண்டாடி அவர்கள் வயிற்றிலே கருவையும் சுமக்க வைத்துவிட்டு, அவர்களைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றும் தாய்மாமன்களையும், முறைமாப்பிள்ளைகளையும் பற்றி நாம் தினசரி கேள்விப்படுவதில்லையா?

• அப்பாக்கள் தங்கள் சொந்த மகள்களையும், மாமனார்கள் தங்கள் மருமகள்களையும் பாலியல் வண்புணர்வு செய்து அவர்களது மாண்பைச் சிதைப்பதில்லையா?

ஒரே சாதிக்குள்ளே நடக்கின்ற இந்த அவலங்கள் சமூக அமைதியைக் குலைப்பதில்லையா? காதல்தான் சமூக அமைதியைக் கெடுக்கிறது என்று முழக்கமிடும் சாதி அமைப்புகள், ஒத்த சாதிக்குள்ளே நடைபெறும் அவலங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் இவர்களது நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. ஏன் இவர்கள் சாதி அமைப்பைக் கட்டிக் காக்கத் துடிக்கிறார்கள்? அதற்காக சகமனிதரைப் படுகொலை செய்யவும் துணிகிறார்கள்? சாதிக்குப் பின்னால் நடைபெறும் அரசியலை நாம் எதிர்கொள்ள வேண்டுமெனில் சாதியத்தின் வேர்களை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதியத்தின் வேர்களை மிகத்துல்லியமாக ஆய்ந்த அண்ணல் அம்பேத்கர், சாதியின் உயிர்மூச்சு ‘அகமண’ முறையில்தான் உள்ளது என்றார். அதாவது, ஒத்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும்போதுதான் சாதியம் கட்டுக்கோப்புடன் நிலைபெறுகிறது. ஆகவே சாதிவிட்டு, சாதிதாண்டித் திருமணங்கள் நடைபெறும்போது சாதியம் அழியாமல் போனாலும் அதன் வீரியம் சற்றுக் குறையத்தான் செய்கிறது. இந்தப் பின்னனியில், “ ‘நல்ல காதலை’ நாங்கள் எதிர்க்கவில்லை: மாறாக ‘நாடகக் காதலை’த்தான் நாங்கள் எதிர்க்கிறோம்” என்று சாதி அமைப்புகள் விளக்கமளிப்பதையும் நாம் சற்று ஆழமாக நோக்க வேண்டும். முதலில் நல்ல காதலுக்கும் நாடகக் காதலுக்கும் இடையே நடுவராக இருந்து தீர்ப்புக் கொடுக்க வேண்டிய (அ) கொலைத் தண்டணை வழங்க வேண்டிய அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது? இரண்டாவதாக நாடகக் காதல் என்று இவர்கள் எதைக் குறிப்பிடுகின்றார்கள்? இருவேறு சாதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் காதலித்துத் திருமணம் செய்வதைச் சாதி அமைப்புக்கள் ஆதரிக்காமல் இருந்தாலும் அத்தகைய திருமணங்களை இவைகள் மூர்க்கமாக எதிர்ப்பதில்லை. மாறாக, பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும் இடையே உருவாகும் காதலையே சாதி அமைப்புகள் ‘நாடகக் காதல்’ என்று சித்தரிக்கின்றன.

இதில் நாம் கூர்ந்து நோக்க வேண்டியது என்னவென்றால், சாதியம் அகமண முறையில் உயிர்வாழ்வதுபோல், அகமண முறையானது ஆணாதிக்கத்தில் (அ) பெண்ணடிமைத்தனத்தில் உயிர் வாழ்கிறது. சாதியச் சமூகத்தில் பெண்கள் வெறும் உடைமைகளே. மானமும் அறிவும் கொண்ட மனிதர்களாகப் பெண்களை சாதி ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. எனவேதான் தாழ்த்தப்பட்ட ஆணும், தாழ்த்தப்பட்டவர் அல்லாத பெண்ணும் காதலிக்கும்போது அதிர்வலைகள் அதிகமாக ஏற்பட்டு கொடூர வன்கொலைகளுக்கு இட்டுச் செல்கிறது. அதேவேளையில் தாழ்த்தப்பட்ட பெண்ணும் பிற்படுத்தப்பட்ட ஆணும் காதலித்து மணம் செய்கிறபோது அவைகள் இத்தகைய வடுக்களை ஏற்படுத்துவதில்லை. காரணம், ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண்களின் சாதிதான் பிறக்கின்ற குழந்தையின் மற்றும் அந்தக் குடும்பத்தின் சாதியைத் தீர்மானிக்கின்றது. ஆகவே சாதியைக் காப்பாற்ற வேண்டுமென்றால் பெண்களை அடிமைப்படுத்தி அவர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைப்பதைத் தவிர ஆணாதிக்கச் சமூகத்திற்கு வேறுவழியில்லை. அவ்வாறு பெண்களை அச்சுறுத்தி, அடக்கி வைப்பதன் கோர வடிவமாகத்தான் சாதியப் படுகொலைகளை நாம் புரிந்துகொள்ள முடியும்.

‘காதலும் வீரமும் தமிழர்தம் பண்பாடு’ என்ற முழக்கமெல்லாம் கேட்ட இந்தத் தமிழகத்தில், காதலின் பெயரால் (உண்மையில் சாதியின் பெயரால்) நடைபெறும் வன்கொடுமைகளை, படுகொலைகளைக் கண்டித்துக் குரல் கொடுக்காமல் பலர் மௌனம் சாதிப்பது பல கேள்விகளை எழுப்புகின்றது.

• ‘இந்து இந்து’ என்று சொல்லி ‘இந்துக்களைக்’ காப்பாற்ற ‘இந்துக்களின்’ பெயரால் நடத்தப்படும் அமைப்புகள் இத்தகைய படுகொலைகளைக் கண்டிக்காதது ஏன்? இளவரசன், செந்தில், கோகுல்ராஜ் எல்லாம் இந்துக்கள் இல்லையா? ‘இல்லை’ என்பதுதான் இந்த மௌனம் உரக்கச் சொல்லுகின்ற பதில். சிறுபான்மையினருக்கும் இந்துக்களுக்கும் வன்பகை மூட்டி அதில் குளிர்காயும் அமைப்புகள், ‘இந்துக்களை’ சாதிவெறி அமைப்புகள் சூறையாடும்போது மவுனியாக இருந்து வேடிக்கை பார்ப்பது இந்துத்துவத்திற்குப் பின்னால் சாதி ஒளிந்திருப்பதை நமக்கு உணர்த்தவில்லையா?

• ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையைக் கண்டித்து உணர்ச்சிபொங்க முழக்கமிட்டவர்கள், இங்கே தமிழகத்தில் கண்ணெதிரே நடக்கும் சாதிவெறிப் படுகொலைகள் குறித்து அமைதி காப்பது (அ) மென்மையாகக் கண்டிப்பது, தமிழ்த் தேசியத்திற்குப் பின்னாலும் மறைந்திருக்கும் சாதி அரசியலைத் தோலுரித்துக் காட்டவில்லையா?

• சமூக அவலங்களைத் திரைக்காவியமாக்கி அதன்மூலம் கோடிக்கணக்கில் பணம் பார்க்கும் திரைப்பட நடிகர் கூட்டம் இத்தகைய படுகொலைகளைக் கண்டுகொள்ளாமல் ‘ஷூட்டிங் ஸ்பாட்டிற்குச்’ செல்வதை எப்படிப் புரிந்துகொள்வது?

• ‘இது பெரியார் பிறந்த மண்’ என்று மூச்சுக்கு முன்னூறுமுறை முழக்கமிடும் அரசியல் அமைப்புகள், கட்சிகள் இத்தகைய சாதியப் படுகொலைகள் குறித்து மவுனம் சாதிப்பது ஏன்? சாதியை வைத்து வாக்குவங்கி அரசியல் நடத்துவதைத் தவிர இந்த அமைதிக்கு வேறுஎன்ன நோக்கம் இருக்கமுடியும்? மேலும் சாதி - கட்சி அரசியல் - அரசு நிர்வாகம் - காவல்துறை இவைகளுக்கிடையே உள்ள சாதியப் புரிதலை இந்த மவுனம் வெளிச்சம் போட்டுக் காட்டவில்லையா?

மேலும், காதலுக்கும் சாதிக்குமிடையேயான மோதலாக இப்படுகொலைகள் சித்தரிக்கப்படுவது ஏன் என்று நாம் சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டும். குடும்ப கௌரவம், சமூக அந்தஸ்து என்பனவெல்லாம் தனிமனித ஒழுக்கத்தில் அல்லாமல் பெண்களை அடிமைப்படுத்தி வைப்பதில்தான் உள்ளது என்று கற்பிக்கிறது சாதியம். தான் காட்டுகின்ற ஆணைத்தான் பெண் திருமணம் செய்ய வேண்டுமென்று நிர்ப்பந்திப்பதுதான் ஆணாதிக்க (அ) சாதியச் சமூகம். ஏனெனில் சாதியச் சமூகத்தில் பெண்களுக்குச் சுதந்திரமோ மற்ற பிற உரிமைகளோ கிடையாது. அவர்கள் ஆண்களின் உடைமைகளாகவே பார்க்கப்படுகின்றனர். இதுவரை நிகழ்ந்த சாதிய வன்கொலைகளில் நேரடித் தொடர்புடைய பெண்கள் (திவ்யா, மல்லிகா, ஸ்வாதி) ஊடகங்கள் வாயிலாகக்கூட தங்கள் மனத்தில் உள்ள உண்மைகளை வெளிஉலகிற்குச் சொல்லமுடியாமல் இருப்பதே சாதியத்தின் ஆணாதிக்க முகத்தை அப்பட்டமாய் வெளிப்படுத்துகின்றது.

இவ்வாறு பெண்களை நசுக்கி அதன்மூலம் உயிர்வாழ்கிற சாதியச் சமூகம் பெண்களைக் காப்பாற்றுவதற்காகவே காதலை எதிர்ப்பதாகச் சொல்வதுதான் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. பெற்றோரின் பாசம் (அ) கனவு, காதலர்களின் வருமானம் போன்ற பல காரணங்களை இவர்கள் காதலுக்கு எதிராக முன்வைத்தாலும், சாதிவெறியே காதலர்களைப் பிரிக்கவும், அதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைக் கொலை செய்யவும் தூண்டுகிறது. ‘தாழ்த்தப்பட்ட பெண்களோடு கள்ள உறவு வைத்துக் கொள்ளும்போதும், அவர்களைப் பாலியல் வன்புணர்வு செய்யும்போதும் சாதியத் தூய்மை என்ன ஆகிறது?’ என்ற கேள்விக்கு மட்டும் சாதியைத் தூக்கிப் பிடிக்கும் கோமான்கள் யாரும் இன்றுவரை பதில் சொல்லவே இல்லை என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது. உண்மையிலேயே இவர்கள் சாதியைக் காப்பாற்ற விரும்பினால் தாழ்த்தப்பட்ட பெண்களோடு தவறான உறவு வைத்துக்கொண்டு சாதிக்குக் களங்கம் ஏற்படுத்துகிற ‘மேல்சாதி’ ஆண்களைத்தானே தண்டிக்க வேண்டும். ஏன் காதலிக்கின்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்களை மட்டும் தண்டிக்கிறார்கள்?

நிறைவாக, காதலுக்கும் சாதிக்கும் இடையே உள்ள கருத்தியல் முரன்பாட்டை ஆழமாகப் பார்ப்போம். ‘காதல் செய்வது உயிரியற்கை’ என்றார் பாவேந்தர். ஆம்! காதல் இயற்கை நமக்குத் தந்த வரம். சாதி மனிதன் தனக்குத்தானே வருவித்துக் கொண்ட சாபம். காதல் அன்பிலிருந்து மலர்வது. சாதி ஆதிக்க உணர்வில் பிறப்பது. காதல் பிறருக்காக உயிரைக் கொடுக்கவும் துணியும் (இளவரசன் படுகொலை தற்கொலை என்று வைத்துக் கொண்டாலும்கூட). சாதி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டப் பிறரது உயிரைப் பறிக்கும். காதல் பெண்களை மனிதர்களாகப் பார்க்கும். அவர்களது உணர்வுகனை மதிக்கும். குறிப்பாகத் தான் விரும்பும் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்து கொள்ளும் பெண்களின் உரிமையைக் காதல் அங்கீகரிக்கும். சாதி பெண்களை உடைமைகளாகவும், பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் நுகர்வுப் பொருளாகவுமே பார்க்கும். காதல் மனிதரை மனிதராக மாற்றும். சாதி மனிதரை மிருகமாக மாற்றும். காதல் சமத்துவத்தை வளர்க்கும். சாதி ஏற்றத்தாழ்வை நிலைநாட்டும். ஆகவே மனிதம் வாழக் காதல் வேண்டும். மாந்தநேயமுள்ள மனிதர்கள், சாதி ஏற்றத்தாழ்வுகளை மறுப்பவர்கள், தீண்டாமையை எதிர்ப்பவர்கள் அனைத்துச் சாதியிலும் சமயத்திலும் இருக்கிறார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மாந்த நேயமுள்ளோர் அனைவரும் சாதி சமயம் கடந்து இணைவோம்!
மாந்த நேயத்தை மறுக்கும் சாதியை வேரறுப்போம்!

- மோரிஸ்

Pin It