dalit 265கதவைத் தட்டுகின்றேன்
பிடித்திருக்கிறதா என கேட்க மாட்டேன்
உங்கள் எரிச்சல் சொல்லி விடுகிறது
பிடிக்கவில்லையென்று
உங்கள் கடுகடுப்பு காட்டி விடுகிறது
நீங்கள் விரும்ப வில்லையென்று
கொஞ்ச நாள் முன்பு வரை
உங்கள் முகம்
என் வீட்டுக் கண்ணாடியில் இருந்தது
உங்கள் இதயம்
எங்கள் வீட்டு பூஜை அறையில் இருந்தது
புதிதாக நீங்கள் உதிர்த்த சொல்
எல்லாவற்றையும்
எடுத்துக்கொண்டு போய் விட்டது
போர் நடந்த தினங்கள் போல
தீப்பற்றி எரிகிறது மனசு
உங்கள் செயல்
எல்லாவற்றையும் கலைத்து விட்டது
அணு குண்டு விழுந்த நகரம் போல
நிகழ் காலம் எரிந்து கொண்டிருக்கிறது
கனவுகள் ஊற்றி
வளர்த்த மரம் வெட்டப்பட்டு விட்டது
புதிய செடி நடும் வரை
காத்திருக்க வேண்டும்
இது கடவுளை நடுவது போல
சுலபமான வேலையில்லை
அல்லது பொய் சொன்ன கடவுளுக்கு
கோவில் இல்லாமல் போகட்டுமென
ஒரு வரியில்
ஒரு கடவுளின் வாழ்வை முடித்து விடும் காரியமல்ல
நம் கைகள் நம்மிடம் இல்லை
சாதி கொண்டு போய் விட்டது
அரசியல் கொண்டு போய் விட்டது
கதவைத் தட்டுகின்றேன்
உன்னிடமுள்ள எல்லா எரிச்சலையும் வாங்கிக்கொள்ள
மீண்டும் கதவைத் தட்டுகின்றேன்
உன்னிடமுள்ள எல்லா
கொடூரத்தையும் மிச்சமின்றி வாங்கிக்கொள்ள
இன்னும் எவ்வளவு வன்மத்தை
இருப்பு வைத்திருக்கிறாய்
இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்னும்
தீர்ந்து போகவில்லையா
உன் வெறுப்பு
இந்த தேசத்தின் உலக வங்கிக் கடன் போல
அது ஏன் ஏறிக்கொண்டே போகிறது
உன் எல்லா தீமைகளையும்
உண்டு விழுங்கி
தீய்ந்து போக எண்ணுகின்றேன்
உன் கொடூரத்தை எனக்கு மட்டும் பங்கிடு
அடுத்த சந்ததிகளை விட்டு விடு
உன் கருவிலிருக்கும் குரோதத்தை
இந்தப் பிறவியில் இறக்கி விடு
உன் அடுத்த சந்ததி
மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கட்டும்
உன் தாய் மொழியும்
என் தாய் மொழியும் ஒன்று
என்பதைத் தவிர
உனக்கும் எனக்கும் என்ன உறவு
நம்பிக்கை இருக்கிறது
கதவைத் தட்டுகின்றேன்
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் இறந்து போன
வள்ளுவனையும் என்னையும்
இணைத்து வைத்த மொழி
ஒரே ஊரில்
உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும்
உன்னையும் என்னையும் இணைக்காதா?

- கோசின்ரா

Pin It