tree 255(தாய் மரம் கன்றுக்குச் சொல்கிறது)

கண்ணே கன்றே! என்வேரின் தோன்றலே!
மண்ணின் செல்வமே மாசறு பொன்னே!
வடக்கின் வாடைக்கும் அணையா விளக்கே!
முடக்கும் கோடைக்கும் அஞ்சா நெஞ்சமே!
ஈட்டிக் குருத்தால் மண்ணைப் பிளந்தாய்
பாட்டுத் தமிழாய்ப் பரவி வளர்ந்தாய்
எந்தன் காலம் சாயுங் காலம்
உந்தன் காலம் விடியும் காலம்
எந்தன் பரம்பரை பிறப்பே குழந்தாய்!
இந்தமண் நமதுமண்: நமக்கு உயிரைத்
தந்தமண்: ஊட்டி நம்மை வளர்த்தமண்
எந்த உயிரும் நம்மை நாடும்
அண்டிய வர்தமை நிழலில் அணைப்பாய்
காற்றை வீசி வியர்வைத் துடைப்பாய்
மலரின் மணத்தைக் தென்றலில் கலப்பாய்
நோய்க்கு மருந்தாம் தேனைச் சொரிவாய்
மானுடத் தொண்டர்க்கு மலரைச் சேர்ப்பாய்
கனியை வழங்கிப் பசியைத் தீர்ப்பாய்
வேரையும் வேண்டுவோர் வாழட்டும் ஈவாய்
வெட்டுவோர்க் கும்பயன் படவே வீழ்வாய்;
பிறவியின் பயனைச் செயலில் நாட்டவே !

- குயில்தாசன்

Pin It