பரிணாமம்

பிள்ளைகளைப் பெற்ற – நல்ல
பெற்றோரே பெற்றோரே!
பிள்ளைகளை முதலில் - முழு
மனிதராக் குங்கள் - பின்
பொருளீட்டும் வழியினைக் காட்டுங்கள்.
.இருளோட்டும் அறிவினை ஊட்டுங்கள்

இல்லத்துக் குள்ளே – உறைவோர்
இயங்கிக் காட்டுங்கள்.
செல்லக் குழந்தைகள் - அறியச்
செய்து காட்டுங்கள் - அவர்
நெஞ்சினில் நல்லதே பதியட்டும்
நல்லஉயர் சிந்தனையே வளரட்டும்

ஏட்டுக் கல்வியால் – மனிதம்
ஏற்றம் காணுமோ
கூடி வாழ்வதை – குழந்தை
கற்க வேண்டுமே – பள்ளியில்
மரபுக்குறை தீர்த்திட வேண்டும்
மானுடம் முழுதுற வேண்டும்

முட்டைக் கோழியோ – உமது
முத்துப் பிள்ளைகள் ?
குட்டைக் கூட்டிலே – அடைத்து
குப்பை யாக்கவோ ? – அன்பு
மானம் அறிவுமுத லானவெல்லாம்;
மானுடம் என்பதன் பண்பல்லவோ!

கல்வியைக் கற்பிக்கும் - நூல்பல
கற்றோரே சான்றோரே !
மானுடப் பரிணாமம் - மேலும்
மாசற வளர்ப்பீர் - தூய
மனிதரைப் புவியினில் ஆக்குவீர்
இனிதான உலகினை இயக்குவீர்

நல்லதும் தீயதும்; - கலந்தே
மானுடம் வளர்ந்ததாம்
அல்லன நீக்கி – முழு
பரிணாமம் வளர்ப்பதே கல்வி
கல்வியைத் தொண்டெனப் புரிவீர்
கற்றதன் பயனை அடைவீர்!


பயிற்சி செய்வீர்

பயிற்சி செய்வீர் பயிற்சி செய்வீர்
சிறிய பருவத்து முதலே
எதிலும் மனது பழகும் வகையில்
பயிற்சி செய்வீர் குழந்தைகாள் !
தோற்கும் பயிற்சியும் ஏமாறும் பயிற்சியும்
தொடர்ந்து இன்றே தொடங்கிச் செய்க!

ஆதி மனிதன் தோற்கப் பயின்றான்
அனைத்தும் வெல்ல ஆற்றல் பெற்றான்
எதையும் தாங்கும் இதயம் பெற்றான்
எதையும் பயிற்சி எளிதா யாக்கும்
வலிதும் பிறகு மெலிதா யாகும்
வளமுடன் வாழ்வு இனிதா யாகும்

உண்ணப் பயின்றீர் உடுக்கப் பயின்றீர்
உரைக்கும் மொழியைப் பேசிப் பயின்றீh
எண்ணப் பயின்றீர் எழுதப் பயின்றீர்
உண்ணும் உணவின் சுவையைப் பயின்றீர்
இன்னலை வெல்லும் பயிற்சி யின்றி
இடிந்து போவதோ? விதியை நோவதோ?

இன்றைய மனிதன் உணரா அறிவால்
இன்பம் என்னும் ஆசையே பயின்றான்
தோற்கும் துன்பம் ஏமாறுந் துன்பம்
வாட்டி வதைத்தன வாழ்வைக் கெடுத்தன
ஏற்கும் யாவினும் யாவையும் நிகழும்
எவற்றையும் வரவேற்று வெல்லப் பழகு!

- குயில்தாசன்

Pin It