“அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்”

கூர்மையான அரத்தைப் போன்ற அறிவு கூர்மை கொண்டு வாழும் அறிவாளி என்போனுக்கு, மனிதருக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்பு இல்லை என்றால் அவனை மனிதன் என்று கருதுதல் தகாது. ஐந்தறிவுக்கும் கீழான மரம் என்னும் தாவரத்திற்குத்தான் ஒப்பிட வேண்டும் - என்பது மானுடத் திருவறமறையாம் திருக்குறள் வகுத்துள்ள இலக்கணமாகும்.

periyar 3333சற்றொப்ப மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மானுடம் முழு பரிணாமம் அடையக் கவலையும் ஆர்வமும் கொண்டு சிந்தித்துத் தனி மனிதன், குடும்பம், நாடு, அரசியல், நிர்வாகம் முதலானவை எவ்வாறு இருந்து இயங்க வேண்டும், எவ்வாறு இருந்து இயங்கக் கூடாது – எது நல்லது எது தீயது என்னும் மனிதர் வாழும் இயக்கத்தை தன் காலச் சூழலுக்கேற்ப முழு பரிணாமம் கொள்ளும் வகையில் எடுத்துச் சொல்லித் தன் திருக்குறள் வாயிலாகப் பதிவு செய்து சென்றார் திருவள்ளுவர்.

அவரைப் போன்றே பெரியார், மானுடத்தைப் புரிந்து கொண்டபோது தன்னைச் சுற்றியுள்ள மனிதப் பண்பின் சீரழிவைக் கண்டு உள்ளம் பதைக்கச் சிந்தித்தார். அடிமைகளாக இருந்து உழைத்தும் துன்பங்களையே கூலியாகப் பெற்று உழன்று வரும் இவர்களைக் காத்து மானமும் அறிவும் கொண்டும் விடுதலை ஊணர்வுடனும் மனிதப் பண்புடனும வாழ்விக்கத் தன் வாழ்நாளைப் பயன்படுத்த வேண்டும் என்று முனைப்புடன் செயலாற்றினார். பெரியாரிடம் நான் பெற்ற தாய்ப்பாலே மனிதநேயம்தான்.

ரோஜா செடி முள்முள்ளாகத்தான் இருக்கும். ஆனால் அதன் மலரின் அழகு கண்ணைக் கவரும், மணந்து மனங்கவரும். தேன் இனிக்கும் மருந்தாகும். பெரியாரின் ஒவ்வொரு சொல்லும் செயலும் மானுடப் பண்பின் பரிணாம வளர்ச்சிக்கு தடையாக உள்ள யாவையும் நீக்கப்பெற்று முழு மானுடம் நோக்கிப் பரிணமிக்க வேண்டும் என்பதேயாகும். இந்த உணர்வும் சிந்தனையும் அவருக்கு இயல்பாகவே இருந்து செயல்பட வைத்துள்ளது. எவ்வாறு என்பதற்குச் அவரின் வாழ்வில் நிகழ்ந்தவற்றில் சில…….

பெரியாரின் துணைவியார் அன்னை நாகம்மையார் மறைந்தபோது மற்ற அனைவரும் அழுது கொண்டிருந்தார்கள். பெரியார் துக்கத்திற்கு வந்தவர்களின் பசியைப் பற்றிச் சிந்தித்தார். உடனே அனைவருக்கும் உணவாக்கிப் பறிமாறச் செய்தார்!

ஒரு பார்ப்பனப் பெண்ணைப் பிள்ளைப் பேற்றுக்காக மகிழுந்தில் மருத்துவமனைக்கு அவளின் பெற்றோரும் உறவினர்களும். அழைத்துச் செல்கின்றனர். புயலுடன் மழையும் சேர்ந்து கொள்ள மகிழுந்து கெட்டு நின்று விடுகிறது. பேறுகாலம் நெருங்கி விட்ட பெண் வேதனையுடன் கதறுகிறாள்.;. பெற்றவரும் மற்றவரும் செய்வதறியாது துடிக்கின்றனர். அப்போது அந்த வழியில் மூடுந்து ஒன்று வரக் கைக்காட்டி நிறுத்த வேண்டுகின்றனர்! மூடுந்து நின்றுவிடுகின்றது. “போய் என்னவென்று பார்.” ஒரு முதியவரின் குரல் சொன்னது! மூடுந்து ஓட்டுநர் இறங்கிச் சென்று பார்த்துவிட்டு வந்து நிலைமையைச் சொல்கின்றார். “சீக்கிரம் அவர்களை நம் வண்டியில் ஏற்று”அந்த முதியவரின் குரல்! அந்தப் பார்ப்பனக் குடும்பம் மூடுந்தில் ஏறிக் கொள்ளச் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துவிடுகிறது! அந்த வெண்தாடிக் கிழவரிடம் குழந்தையைக் கொடுக்கின்றனர். அந்தக் கிழவன் குழந்தையை முத்தமிட்டுக் கொஞ்சுகிறார். அவர்தான் மானுடத்தின் தலைமகன் தந்தை பெரியார்!

பெரியார் ஈரோட்டு நகராட்சித் தலைவராக இருந்தபோது ஈரோட்டில் பிளேக் என்னும் நோய் கண்டு மக்கள் கொத்துக் கொத்தாக மாண்டு கொண்டிருந்தார்கள். பலரும் நோய்க்கு அஞ்சி ஊரைவிட்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பெரியார் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை! மாறாக நோய் கண்டவர்களைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.

பெரியார் பலருக்குக் கடன் கொடுப்பார். அப்படி பெரியாரிடம் கடன் பெற்றவர்கள், பெரியார் நடந்து போகும்போது எதிரில் வருவது தெரிந்தால் கடன் கொடுத்த பெரியார் பக்கத்துச் சந்தில் மறைந்து கொண்டு கடன் பெற்றவர் சென்று மறைந்தபின்பு நடையைத் தொடர்வாராம்! ஏனென்றால் எவராக இருந்தபோதிலும் - தன்னிடம் கடன்பட்டவராக இருந்தபோதிலும் தன்னால் துன்பமோ சங்கடமோ படக்கூடாது என்ற மனிதத்தன்மை – மனிதநேயம்!

பெரியார் தனிமனிதப் பண்பு வியக்கத்தக்கது. தம்மிடம் வரும் சிறுவர் முதல் முதியோர் ஈறாக எவர் வந்தாலும் மரியாதையுடன் வரவேற்று வந்தவர் சங்கடப்படாமல் உரையாடுவார். இறைப் பற்றாளர்களாகிய துறவியர் தம் இல்லம் வந்தால் அவர்களுக்குத் தேவையான பூசைப் பொருள்களை வாங்கித் தருவார்! குன்றக்குடி அடிகளார் முதலானவர்கள் பெரியாருடன் தோழமையுடன் பழகினர்! ஞானியார் அடிகளாரைக் கொண்டு தன் விடுதலை ஏட்டின் அலுவலகத்தைத் திறந்து வைக்கக் கேட்டுக் கொண்டார். இந்தப் பண்பின் குணத்தால் கவரப்பட்டுப் அவரிடம் தோழமை கொள்ளவும் பணியாற்றவும் பலர் வந்தார்கள். அவர்களில் பலர் பின்னாளில் தலைவர்களாகவும் அறிஞர்களாகவும் பேரும் புகழும் அடைந்தார்கள்.

மாவீரன் பகத்சிங்கிற்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது; ‘மகாத்மா’காந்தி முதல் எவருமே காத்திடக் குரல் கொடுக்க முன்வரவில்லை! பெரியார் மட்டுமே எதிர்த்துக் குரல் கொடுத்தார்.

ராஜாஜியும் பெரியாரும் இரு துருவங்களாகக் கொள்கை வழியில் செயல்பட்டு வந்த போதிலும்; அவர்கள் இருவரின் நட்புக்கு ஈடாக ஒரு எடுத்துக்காட்டையும் எவராலும் காட்டமுடியாது. ராஜாஜி மறைந்தபோது பெரியார் குலுங்கிக் குலுங்கி அழுதாரே! அந்த வரலாற்றைத்தான் சொல்கிறேன். பெரியாருக்குப் பல பார்ப்பனர்கள் நண்பர்களாக இருந்துள்ளார்கள்.

“நான் சொல்வதை உடனே நம்பிவிடாதீர்கள். நன்றாகச் சிந்தியுங்கள். உங்கள் அறிவுக்குச் சரி என்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். சரியில்லை என்றால் தள்ளி விடுங்கள”; -என்பார் பெரியார். இவரைத்தவிர மேதை என்பாரோ ஞானியர் என்பாரோ இவ்வாறு சொன்னதாக நான் அறிந்திலேன். திருவள்ளுவரைத் தவிர! பெரியாரின் இந்தச் சொல்தான் என்னை அவர்பால் ஈர்த்தது.

பெரியரின் தொண்டுக்கும் ஓயாத உழைப்புக்கும் பரிசாக, அவர் யாருக்காக உழைத்தாரோ அவர்கள் கொடுத்த பரிசுகள் ஏராளம்! அவர்மேல் பாம்பு கல் செருப்பு முட்டை முதலானவை வீசப்பட்டன. வசவுகள் பொழியப் பட்டன! அவர் சாக வேண்டும் என்று யாகங்கள் நடத்தப் பட்டன! அனைத்தையும் தன் உழைப்புக்குக் கிடைத்த கூலியாக மகிழ்வுடன் ஏற்றுத் தொண்டாற்றி தன் 95 ஆம் வயதில் களத்தில் போரடியவாறு வீர மரணமடைந்தார்!

பெரியார், மானுடப் பண்பின் பரிணாமம் வளர்த்த புரட்சியாளர். மானுடத்திற்கு எது எது தடையாக உள்ளதோ எது எது பயன்படவில்லையோ அவற்றை யெல்லாம் தகர்க்கப் போராடினார். எவரெவர் அவற்றிற்குக் காரணகர்தாக்களோ அவர்களையெல்லாம் தாட்சண்யமோ விட்டுக் கொடுத்தோ ராஜதந்திரமோ இல்லாமல் எதிர்த்தார்.

இவை பொன்ற பெரியாரின் வாழ்வின் நிகழ்வுகள் மிகை. அவரின் கொள்கைகள் பேச்சுகள் எழுத்துகள் செயல்பாடுகள் யாவும் மனிதப் பண்புகளை நோக்கிப் பரிணமிப்பதாகவே இருக்கும். பெரியாரை அவரின் நடைமுறையில் பார்த்து, கேட்டு, படித்து அறிந்து கொண்ட பின்பே நானும் பெரியாரின் தொண்டர்களில் ஒருவனாக என்னை மாற்றிக் கொண்டேன்.

இன்றையச் சமுதாயச் சூழலில் பெரியாரின் கொள்கைகளைச் சொல்லி மட்டும் மனிதர்களை விழிப்படையச் செய்வது மிகக்கடினமானதாகும். அவரின் மனிதப் பண்புகளைப் பின்பற்றி வாழ்ந்து காட்டித்தான் கொள்கைகளைப் பரப்பி விழிப்படையச் செய்ய இயலும்.

பெரியாரின் மனிதப் பண்பைச் சொல்லி மக்களுக்குப் பெரியார் கொள்கைகளை அறிமுகப்படுத்துவோம். பெரியார் வெல்க!

- குயில்தாசன்

Pin It