குறுக்கும் நெடுக்குமென
கூவிக்குரல் கசகசக்கும்
பெரும் தொலைவுப் பயணத்தில்
மெல்லிய சருகு போல்
செவி கிள்ளி நுழைகிறது அது...

ஒதுங்கிக் கிடக்கும் குப்பைகளை
ஒற்றைச் சுழற்றில்
அள்ளித் தெளித்து
அசரடிக்கும் பெருங் காற்றைப் போல்
சிலரது மனம் கரைத்து
சிம்மாசனம் அமருகிறது அது...

சட்டென்று ஊடுருவாவிட்டாலும்
தட்டித் தட்டித் தாலாட்டி
இதயத்தின் இறுக்கங்களை
ஏதோ செய்துவிட்டுப்
போகிறது அது...

ஒரு கனவின் வெளிப்பாடாய்
ஒரு மௌனத்தின் புலம்பலாய்
ஒரு நேசத்தின் நெட்டுயிர்ப்பாய்
ஒரு வேதனையின் அழுகுரலாய்
ஒரு புன்னகையின் பூவிதழாய்
ஒரு குழந்தையின் இதழ்ச் சுழிப்பாய்
ஒரு அடிவயிற்றுப் பிசையலாய்...

ஆளுக்கொரு உணர்வு தந்து
சில கண்ணீரையும்
சில புன்னகையையும்
மற்றும் சிறிது சில்லறைகளையும்
அள்ளி எடுத்துக் கொண்டு
அடுத்தப் பயணத்துக்கு
அவனுடைய கரத்தில் அமர்ந்து
மௌனித்துப் உடன் போகிறது
அந்தப் புல்லாங்குழல்...

Pin It