அவன்... செத்திருந்தான்
அல்லது.. இதனால் செத்திருக்கலாம்
என்னும் சந்தேகங்களுக்குப்
பேச்சளிக்காமல்..
அவன் செத்திருந்தான்.........!

அவனது... தோட்டிக் குச்சி
மரத்தில் வழக்கம்போலவே
சாய்த்து வைக்கப்பட்டிருந்தது....

அவன் தூர்த்து அள்ளியிருந்த
தெருக்கள்... சுத்தங்களைத் தின்று
குப்பைகளை
ஏப்பமிட்டுக் கொண்டிருந்தன...

அழுது கொண்டிருந்த அவனின்
பிள்ளைகளுக்குத் தெரிந்தது
போல... குப்பைகளுக்கும்
தோட்டிக் குச்சிக்கும்
அவன்.. செத்து விட்டிருந்தது
தெரியாமலிருக்கலாம்....

அவன் பிணமாய் வந்திருந்த
முச்சந்தி கடக்கையில்..
தெருக்களை அடைத்து வழி மறுக்கப்பட...

பழக்கம் மாற்றாது
உயர்திணைகளுக்குப் பயந்து மடங்கிய
பிணம் என்னும் அவனும்
வேறுவழி
பயணித்திருந்தான்....

கொள்ளிக் குடம் உடைத்த
தண்ணீர்.... வழிமறுக்கப்பட்ட
தெருக்களில் ஓடிக்கொண்டிருக்க .....

பானைச் சில்லுகளைப் போலவே
குப்பைகளும்...
தோட்டிக் குச்சியும்
அவனாகியிருந்த பிணமும்...

யாருக்கும் கேட்காமல்
உரக்கக் கத்திக் கொண்டிருக்கலாம் ..
நாங்கள்
அஃறிணைப் பொருள்களென்று...........

- கட்டாரி

Pin It