1.நினைவுகளின் நகங்கள்....

man sad 320நினைப்பது போல
நீங்களே இல்லை
நினைப்பவராக
எப்படி இருக்க.....?
நீட்சிகளின் மீட்சியென
அறுபட்டுக் கொண்டே வரும்
நகங்களைப் போல
நீள்கிறது
நினைவுகளின் காயத்தோடு
நினைப்பது எதுவும்....


2.சாவதின் பயம்

சொற்கள் மிதியடி
பற்கள் படபட
காகம் சிவப்புக்கு
வர்ணங்கள் எச்சம்
மிச்சம் தம் தம்
காற்றழுத்த மனப் பான்மை
தாவரங்கள் மிருகம்
மயங்கு நிலை
பவழம் மாற்று
புணர்ச்சி சலிப்பு
காதல் கயவர்கள்
வாழும் மாயங்கள்
சாகும் கோலங்களில்
விரல்களின் நகம்
மாவும் எறும்பும்
மானிட சாபம்
கூவும் கவிதை
கத்திரி வெண்டை
கலவிக்குப் பின்
காதலும் கலவி
மையிருட்டு
விலக்கிய பின்
நீளத் துடிக்கும் பெண்மை
பொய் சொல்லும்
பேராண்மை
நெஞ்சம் நிமிர்
வெட்கம் மக்கு
சொர்க்கம் சொக்கு
பக்கம் தூரம் வா
வராத கானம்
கானக குயில் மரணம்
சிறகடிப்பு விபத்து
சிதறிய துப்பட்டா
கொடி சாய்ந்தது
உடை வாழ்ந்தது
மனனம் செய்த
வரிகளில் பிழை
விக்கல்
தொடர் அருவி
வெண்ணிற கூந்தல்
வேக வைத்த உடல்
வெடிக்கும்
தீப் பொறிகளில்
மனித வாசம்
வைகறைப் பூக்களில்
வயோதிக பால்யம்
சமச்சீர் அசிங்கம்
சாவதின் பயம்

3.கன்னித் திரை

நினைவுகளில்
குருதி கண்ணீராய்
மாறுகிறது....

வளைவுகளில்
வெற்றிடம் வேர்
விடுத்து செல்கிறது....

மாற்றுச் சிந்தனையில்
மதியம் இரவானது
குழம்பியது சூரியன்....

சொக்கத் தங்கம், இருப்பினும்
சுத்தத் தங்கமா? சோதனைக்கு பழி
கன்னித் திரை.....

மத்தளம் ஊமையானது
திருமணப் பெண் பையனாம் -
வாய்கள் ஓயவில்லை....

4.கடைசிப் பெட்டி....

தவறாக தவறு
செய்துவிட்டு
கை கட்டி நிற்கும்
சிறுவனாக
ரயில் தடம் புரண்ட
நாளில்
தண்டவாளம்....
------------------------------------------

கை விடப் பட்ட
ரயில் பெட்டியில்
சிறை வைக்கப்
பட்டிருக்கிறது
ஒரு தூர
தேசம்....
----------------------------------

சென்று விட்ட அதிர்வுகளின்
கரம் பிடித்தே
நீள்கிறது
முகம்
காணத் துடிக்கும்
கடைசிப் பெட்டி....
--------------------------------------------

5.மதிய நேர மது...

குடித்து விட்டு
அழும் ஒருவன்
அறிமுகம் இல்லாதவன்
எல்லாம் சொல்லி
எல்லை உடைத்தவன்
திரும்புகையில்
இல்லாமல் போனான்....
போதை அதிகமோ
என்றுணர்ந்து
திரும்பிய நானும்
அங்கு இல்லை.....
மேசை முழுக்க
மீண்டும் நிரம்பிக்
கிடந்த
மது போத்தலுக்குள்
கண்ணீர் அடைபட்டுக்
கிடந்தது....
யார் கண்ணீர்
என்பது குடித்த பின் தான்
தெரியும்....
சரி,
அதற்கு முன்
கொஞ்சம் அழுது
கொள்கிறேன்
என்றபோது
அவன் மீண்டும்
அழுது கொண்டு நின்றான்....
கண்ணீர் மறைக்கும்
காட்சியில் நானே
போத்தலாக தெரியலாம்
அவனுக்கும் எனக்கும்
எங்களைக் கண்டும்
காணாமல் போகும்
உங்களுக்கும்.....

- கவிஜி, கோவை 25

Pin It