night 360எழுந்து நடக்க ஏற்றதொரு பிடி கிடைக்கா வசதியில்
வந்தமரும் வறுமைக்குள்
வயிறார கொறிக்கும் சொற்களை
மழைக்கு சூடாய் வறுத்தரும் படி கட்டளையிடுகின்ற
பிரியத்தின் குரல்
கதகதப்பாய் இல்லை

ஜன்னல் தாண்டி பெய்துவிட்ட வாய்ப்பை
பொய்த்துப் போகச் செய்யும் காலத்தை
கருணை ததும்ப அள்ளி முத்தமிடும்
எதார்த்த வேடம் பொருந்தவும் இல்லை

ஏற்றதை எடுத்தாளும் சாமர்த்தியம் வாய்த்திடாத
ஒப்பனைக்குள் ஒளியும்
கோமாளி மூக்கின் இளஞ்சிவப்பில்
கருக்கலைந்த ஏமாற்றத்தின் நிறம் வரையும்
அந்திக்கும் விடியலுக்கும் சம்மந்தம் இல்லை

வண்ணங்களின் பிறை வளர்த்திடும் இருளில்
தெரியும் நிலவும் நிழலும்
கனவுக்கு வெளிச்சமென்று தெரிந்திட்ட போதும்

நிற்பதற்கு வசதியாய் இல்லை நிலம்

- ரேவா

Pin It