வேலை யின்றியும் குறைவேலை செய்தும்
சூலைக் கொண்டு வாடுவர் வினைஞர்
அதிக ஊதியம் பெற்றிடு பவரோ
மதியில் அழுத்த நோய்கொண் டலைவர்
பொருளா தார நெருக்கடி தன்னில்
பெருமுத லாளியும் நிம்மதி இழப்பர்
முதலிய அமைப்பில் செய்திடும் மாற்றம்
மிதநன்மை தரினும் அதுவும் மறையும்
உழைக்கும் ஆற்றலாய் வரலாறு தன்னைப்
பிழையறப் படைக்கும் மாண்புடை மக்களே!
தீதறச் சமதர்ம அமைப்பைப் படைத்திடின்
நோதலில் யாவரும் விடுதலை பெறுவர்
கூடுதல் நலனாய்ப் புவிவெப்ப உயர்வு
தேடும் அழிவைத் தடுத்து நிறுத்தலாம்.

(வேலை இல்லாததாலும், குறைந்த கூலியில் வேலை செய்ய நேரிடுவதாலும் வயிற்றுப் பசியால் தொழிலாளர்கள் வாடுகின்றனர். (மென்பொருள் பொறிஞர் போல்) அதிக ஊதியம் பெறுபவர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு அலைகின்றனர். பெருமுதலாளிகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி நிம்மதியை இழக்கின்றனர். முதலாளித்துவ சமூக அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு, செய்யப்படும் சீர்திருத்தங்களால் ஏற்படும் சிறு சிறு நன்மைகளும் (தற்காலிகமாக இருந்து) விரைவில் மறைந்து விடும். உழைக்கும் ஆற்றலாய் இருந்து பிழையின்றி வரலாறு படைக்கும் சிறப்பான மக்களே! தீதில்லா சோஷலிச அமைப்பைப் படைத்தால் எல்லாத் தரப்பு மக்களும் எவ்வித நோதலும் இல்லாமல் சுதந்திரமாக வாழலாம். கூடுதலான நன்மையாக புவி வெப்ப உயர்வினால் உலகம் அழிவதையும் தடுத்து நிறுத்தலாம்.)

இராமியா

Pin It