வெள்ளைத்தாள்
 
வழித்துத் துடைத்தெடுத்ததுபோல
இருந்தது அவ் வெள்ளைத்தாள்.
ஒரு கூர்மையான
புள்ளி கூட தெரியவில்லை
என்றாலும்
நூறு மடிப்புகள்  வார்த்த பள்ளங்கள்
அதில் தோன்றியிருந்தன.
விலகியிருந்த ஒவ்வொரு வெட்டுக்களும்
சேர்த்தபோது
உருவச்சிதைவு ஓவியம்
ஒன்று உருவாகியிருந்தது.
மழை நாளின் பின்னிரவொன்றில் 
எனக்கேயான மொழியோடும்
சொற்களோடும்
என் தனிமையின் பாதிப்போடும் அவ்வோவியம்
பேச ஆரம்பித்தது முதல்
ஒன்றுமில்லாத அவ்வெள்ளைத்தாளை
வாசலில் கொட்டும் மழையில்
செலுத்திவிட அவ்வளவு
எளிதில் 
மனம் படிந்துவிடவில்லை. 
 
ஊமைப் பெண் ஒருத்தியின் நாக்கு

என்னை கொலை
செய்கிறார்கள்
கொடூரமாக
ஆயுதங்களால் தாக்கி
பிடரியை உடைத்து
நொடிக்கு நொடி
என்னுடல் அடையாளமற்றபடி
குரூரமாக
சிதிலமடைகிறது.
வெண்ணிறத்திலான
ஆடையினால் என்
மனம் கால்கள்கூட வெளித்தெரியாதபடி
முழுவதுமாக போர்த்தப்பட்டிருக்கும்.
அதைக் களைந்து நான் அவமானப்படுத்தப்படுகிறேன்.
மனம் நிர்வாணமானதைப் பார்த்த
அம்மூவர்  வட்டமாக சூழ்ந்து
நின்றபடி
சிரிக்கிறார்கள்.
நான் சேதமடைந்து மறைந்துகொண்டிருக்கும்
வேளைக்கும்
அவர்கள் சிரித்துக்கொண்டிருந்த
வெகுதூரமான காலத்திற்கும்
இடையிலிருந்த
ஒரு ஊமைப் பெண்ணின்
பயனற்ற நாக்கு
வலுத்துத்
துண்டிக்கப்படும் கணத்தில்
நான் அவளாக மாறியிருந்தேன்.

- ஆ.கிருஷ்ண குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It