கடவுளின் வார்த்தைகளின் மேல்
இரத்த வாடை வீசத் துவங்கியது
எப்போதிலிருந்து
என்பது எனக்கும் தெரியாது.
 
ஒரு சாண் வயிறு
குழைந்து நெளிந்து
பசியின் குரலாக
வெளிப்பட்ட காலமாக
அது இருக்கலாம்.

பின் வளரத் துவங்கி
உலகம் பிடிக்கும் ஆசையில்
உனது போதி மரங்களை
வெட்டத் துவங்கிய
பரிணாம மனிதனாய் இருக்கலாம்.

யாரும் அறியாமல்
வார்த்தைகளின்
புன்னகையினூடே வழியும் இரத்தம்
பருவம் பிறழ்ந்த பயிரென
சரித்து விடுகிறது
சாதாரணமானவனின் வாழ்வை
வறண்ட தரை நோக்கி.

வரலாறுகள் எழுதித் தீர்த்த
கடவுளின் வார்த்தைகளை
அறிவியல்
கேள்விகளால் சோதித்துக் கொண்டிருக்க
சென்ற நூற்றாண்டின்
ஒரு பெண்ணெண
விதிக்கப்பட்ட வளைக்குள் வாழ்ந்தபடி..

தன் மேல் வழியும்
இரத்தத்தின் சுவை நுகர்ந்தபடி
ஒரு மதமென வாழ்கிறது வாழ்வு

Pin It