சாக்கடை ஆற்றில் இறங்கியவன்
மூடிக்கிடந்த கதவை திறக்கின்றான்
கழிவை திறக்கும் திறவுகோல் அவனிடம் மட்டும்தான் இருக்கிறதா
நச்சு காற்றிலிருந்து எப்படி தப்பிகின்றான்
குப்பைக் கூளங்களை வாரும்
அந்த மனிதனில் அவன் இருகின்றானா
நீர்த்தாவரங்களை களையும்
அவன் கையில் சிக்குவதென்ன நாயின் பிணமா
சர்வசாதரணமாக தள்ளிவிடுகின்றான்
கருப்புநீர் அதை இழுத்துச் செல்கிறது
இவனும் சாக்கடை தண்ணீரைப் போல் கருப்பானவன்
எதையும் ஒதுக்கித் தள்ளாதவனாய் இருகின்றான்
சுமந்துச்செல்கிறவனாக
சுத்தம் செய்கிற ஆறாக இருக்கின்றான்
கழிவு நீர் ஆற்றில் ஞெகிலிகள் பிணங்களாய் மிதக்கின்றன
நகரத்தின் மறைக்கப்பட்ட முகத்தை பார்க்கின்றான்
சுத்தவாதிகள் அவனை மேலிருந்து வேடிக்கை பார்க்கிறார்கள்
ஆன்மாவை சுத்தம் செய்யும் மண்ணாங்கட்டிகள்
நகரத்தில் எங்காவது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கலாம்
அவை எங்கே போய் ஒளிந்துக்கொண்டன என்று
அவன் கேட்க மாட்டான்
அவனைப் போல இந்த ஆறும் கேட்கப்போவதில்லை
காலில்சிக்குகிறது சாக்கில் கட்டப்பட்ட ஒரு பிணம்
எத்தனை நாளாய் சுமக்கிறதோ ஆறு
உடைந்த பாட்டில்களும் கிழிந்த துணிகளும்
மிதந்து செல்கின்றன அவன் இடுப்பளவு உயரத்தில்
நகரம் சுத்தத்தில் வாழ்கிறது
சுத்தத்தின் வரையறைகளை பேசுகிறது
கழிவில் பிரதிபலிக்கும் நகரத்தின் முகத்தை
பார்த்தபடி சேற்றிலிருந்து உடலை நகர்த்துகின்றான்
கழிவு நீர் அவன் உடல் தொட்டு ஓடுகிறது
பேச மனிதன் கிடைத்த சந்தோஷம் அதற்கு
அந்த மனிதனும் அந்த நதியுடன் பேசுகின்றான்
ஒதுக்கப்பட்டவைகளை ஆதரிக்கும் உலகம்
நம் சன்னலுக்கு வெளியே இருந்துக் கொண்டிருக்கிறது.

Pin It