அமிலம் காய்க்கும் ஒரு மரமிருந்தால்
என்னிரு கரங்களினால் அதை அழித்திடுவேன்.
இம்முறை மண்ணெண்ணெய் கூட தேவையிருக்காது
வெறும் தீக்குச்சி போதும் - அது
தன்னைத் தானே இரையிட்டுக் கொள்ளும்!

நான் ஒரு பெண் நோவாவாக மாறி
பிறக்கப் போகும் புது உலகதிற்க்கு தேவையற்ற அனைத்தையும்
எத்தனை எண்ணிகையில் இருந்தாலும்
அத்தனையும் சேகரிப்பேன்.
என்னை வன்மையுடன் பார்க்கும் உன் கண்கள்,
என்னை போக பொருளாய் நினைக்கும் உன் மூளை,
என்னை ஒடுக்க நீ பயன்படுத்தும் உன் உறுப்பு,
இனிய சொற்கள் பேசும் உனது நா,

உன்னை களியூட்டும் எனது கொங்கைகள்,
எனதழகாய் நீ கருதும் என் வளைவுகள்,
உன் மதிகெட்ட வார்த்தைகளுக்கு மயங்கும் என் மனம்,
உன் தவறுகளை மன்னிக்கும் என் குணம்,
எனக்கு வரையறைகள் வகுத்திட்ட உன் சாத்திரங்கள்,
உன்னை சுதந்திரமாய் திரியவிட்ட உன் சாமிகள்,
உன்னையண்டி நான் என்றுரைத்த உன் தந்திரம்,
நீயே "சக்தி" எனக்கூறும் உன்  "வாய்மை,"

வீட்டுக்குள் நீ இருந்திருந்தால் இவ்விணை வந்திராது - என பேசும்
உன் விவேகம்,
உடலை மறைத்து ஆடையணிவாய்
எனக்கூறும் உன் மதிநுட்பம்,

என் இலக்கணமாய் நீ உருவாக்கிய கண்ணகி,
சாவித்திரி, நளாயினி, சாரதா தேவி,
உன் பெருமைக்கு மாண்ட சூர்ப்பனகை,
....

ஒவ்வொரு நாளும் மறைந்து மறைந்து என்னை
பழிதீர்க்கும் சூரியன்,
இவளைப் போல் பொறுமையாயிரு என
நீ காட்டிய பூமி,

நான் இறந்த பின்பே இயற்றப்படும்
உன் சட்டங்கள்,
நான் இறந்த பின்பு கண்ணீர் வடிக்கும்
உன் இயலாமை,

என அனைத்தையும் எரியுமந்த அமில மரத்திற்கு
இரையாக்கி, பத்தி எரியும் அதன் வெந்தனலுடன்,
என் மூச்சை சேர்த்து ஊதி, உயர்த்தி - அது
விண்ணைத் தொட்டு, மேகத்தை விரட்டி, மழையை முறித்து
உலகமெங்கும் வெப்பமாய், வெளிச்சமாய் மாறட்டும்!

- பூவி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It